"இதெல்லாம் பத்தாது"... கறுப்பு பண விவகாரம் தொடர்பாக மோடிக்கு சாமி கடிதம்
அகமதாபாத்: வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை' என விமர்சித்தார்.
மேலும், ‘இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, நான் கடிதம் எழுதி அனுப்பி விட்டேன். ஆனால் ஒரு வக்கீலான நிதியமைச்சர் ஜெட்லி இது சரியில்லை. அது சரியில்லை என கூறிக் கொண்டிருக்கிறார்' எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை நிறைய செய்திருக்கலாம். ஆனால் எதையுமே செய்யவில்லை. ஆனால் விரைவில் அவை நடைபெறும் என நம்புகிறேன். பிரதமரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றார் சாமி.
கறுப்புப் பணத்தை மீட்டு வர 4 வழிகள் இருப்பதாகவும் சாமி கூறினார். அவர் கூறுகையில், உள்ளூர் கோர்ட் மூலமாக சம்பந்தப்பட்ட நாட்டு கோர்ட்டுக்கு சட்ட ரீதியான கடிதம் அனுப்பி சந்தேகப்பேர்வழிகளின் வங்கிக் கணக்குகளை ஆராய நடவடிக்கை எடுக்கலாம்.
அது சரிப்பட்டு வராவிட்டால் ஜெர்மன் பிரெஞ்சு வழியை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை நமது வலையில் வீழ்த்தி அவர்களை மடக்கி அதன் மூலம் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களின் தகவல்களைக் கறக்கலாம்.
அமெரிக்க பாணியிலும் செயல்படலாம். அதாவது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வங்கியின் இந்திய ஊழியர்களைப் பிடித்து அவர்கள் மீது வழக்குப் போட்டு மடக்க முயற்சிக்கலாம்.
இதையெல்லாம் மோடியால் செய்ய முடியும். அவர் செய்வார் என்று நம்புவோம் என்றார் சாமி.












Click it and Unblock the Notifications