‛2.18 லட்சம் ஓட்டுகளுடன் 2வது இடத்தில் நோட்டா’.. இந்தூரில் பெரிய ட்விஸ்ட்! சம்பவம் செய்த காங்கிரஸ்
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் லோக்சபா தொகுதியில் நோட்டாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி நோட்டாவுக்கு 1.51 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் 29 தொகுதிகளில் பாஜக தனித்து களமிறங்கி உள்ளது. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் அதாவது கஜுராஹோ தொகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் போட்டியிட்டுள்ளது.
இந்நிலையில் தான் தேர்தல் வேளையில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் ஐக்கியமானார். அதோடு அக்சய் காந்தியோடு காங்கிரஸ் சார்பில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் இல்லாத நிலை உருவானது. பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி காங்கிரஸ் அல்லாத பிற வேட்பாளர்களுடன் மோதினார். இதற்கிடையே தான் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தியை திட்டமிட்டு பாஜக தூக்கி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் லோக்சபா தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினர்.
அதன்படி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் சமயத்தில் நோட்டாவுக்கு அதிகளவில் ஓட்டளித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக வேட்பாளர் சங்கர் லவானி இந்த தொகுதியில் 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 ஓட்டுகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சய் 51,659 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 ஓட்டுகள் பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி தனது வேட்புமனுவை ராஜினாமா செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நோட்டாவுக்கு ஓட்டளித்தனர். இதனால் தொகுதியில் நோட்டா 2வது இடம் பிடித்தது. இதனால் நோட்டாவுடன் ஒப்பிடும்போது பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10 லட்சத்து 80 ஆயிரத்து 77 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முன்னதாக இந்தியாவில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்வதற்காக நோட்டா பட்டன் அறிமுகம் செய்யப்பட்டது. நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஒரு தொகுதியில் இவ்வளவு ஓட்டு விழுந்தது இல்லை. முதல் முதலாக நோட்டோவுக்கு இந்தூர் லோக்சபா தொகுதியில் தான் லட்சத்தை தாண்டி 2.18 லட்சம் ஓட்டுகள் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications