மும்பையில் காதலியை மணக்க ரூ. 5 கோடி வரதட்சணை கேட்ட என்.ஆர்.ஐ. கைது
மும்பை: மும்பையில் காதலியை திருமணம் செய்ய ரூ. 5 கோடி வரதட்சணை கேட்ட வெளிநாடு வாழ் இந்திய என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கொலாபா பகுதியைச் சேர்ந்தவர் சாஹில் ஜோக்லிகர்(30). என்ஜினியரான அவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். அவர் தானேவில் உள்ள ஆம்பர்நாத் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்தை டிசம்பர் 16ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சாஹிலின் தந்தை ராஜேந்திரா(50) மற்றும் தாய் பல்லவி(48) பெண் வீட்டாரிடம் ரூ. 5 கோடி வரதட்சணை கேட்டனர். இதற்கு சாஹிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெண் வீட்டார் உறவினர்கள், நண்பர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்துவிட்டனர். இந்நிலையில் ரூ. 5 கோடி வரதட்சணை பணத்தை அளிக்க முடியாத நிலை இருப்பதாக கட்டிட தொழில் செய்யும் பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
இதையடுத்து சாஹிலின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் பெண்ணின் சகோதரர் இது குறித்து செவ்வாய்க்கிழமை மும்பை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சாஹில் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோரை அன்று இரவே கைது செய்தனர்.
வியாழக்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று அந்த 3 பேரும் வெளியே வந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications