30 நிமிடங்கள் அந்தரத்தில் தவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.. வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்!
புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் வி.கே.பாண்டியன் சென்ற ஹெலிகாப்டர், தரை இறங்க முடியாமல் சுமார் 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. பின்னர் ஜர்ஸுகுடா என்ற இடத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. ஒடிசாவில் ஆளும் பிஜேடி முதல்வர் பட்நாயக்கின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஒடிசாவில் வரும் மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய 4 நாட்களில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் அவரது தனி செயலாளராகப் பணியாற்றி தற்போது 5டி தலைவராக இருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியனும் இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், விகே பாண்டியனும் இன்று 3 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொணடனர். இன்று பிரச்சாரம் முடிந்து ஹெலிகாப்டரில் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் வி.கே.பாண்டியன் ஆகியோர் நுவாபாடா மாவட்டம் காரியார் பகுதியில் இருந்து புறப்பட்டனர். புவனேஸ்வர் விமான நிலையத்தில் அவர்கள் இறங்குவதாக இருந்தது.
ஆனால் அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர், புவனேஸ்வர் விமான நிலையத்தை நெருங்கிய போது பலத்த காற்று வீசியதோடு கனமழை பெய்தது. இதன் காரணமாக ஹெலிகாப்டரை தரை இறக்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர் அந்தரத்திலேயே வட்டமடித்தது.
சுமார் 30 நிமிடங்களாக தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டது. பின்னர் ஜர்ஸுகுடா என்ற இடத்தில் வீர் சுரேந்திர சாய் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. அங்கிருந்து முதல்வர் நவீன் பட்நாயக் காரில் புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
இதற்கிடையே, விகே பாண்டியன் ஹெலிகாப்டரில் இருந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர், "மோசமான வானிலை காரணமாக புவனேஸ்வரில் தரையிறங்க முடியாமல் ஜார்சுகுடாவில் தரையிறங்கினோம். முதல்வர் பட்நாயக் நலமுடன் உள்ளார். இப்போது நாங்கள் புவனேஸ்வருக்கு புறப்படுகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications