சொல்லியடித்த பாஜக.. சோகத்தில் காங்கிரஸ் - கட்சியை மீறிய ஒடிசா எம்எல்ஏ! ஜனாதிபதி தேர்தலில் ட்விஸ்ட்
புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. முஹம்மது மொகிம் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

திரௌபதி vs யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறார்.

இன்று வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாக்களித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.
இந்த நிலையில் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் முஹம்மது மொகிம் வாக்களித்த பின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

பாஜகவுக்கு வாக்கு
அப்போது பேசிய அவர், "நான் காங்கிரஸ் எம்.எல்.ஏதான். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கே நான் வாக்களித்தேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நான் என் மனசாட்சி சொல்வதை கேட்டேன். இந்த மண்ணுக்கு ஏதாவது ஒன்றை செய்ய என் மனம் விரும்பியது. எனவே அவருக்கு வாக்களித்தேன்." என்றார்.

சொல்லியடித்த பாஜக
ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின சமுதாய பெண்ணான திரௌபதி முர்முவை தேர்தலில் போட்டியிட வைப்பதன் மூலம் கூட்டணியில் இல்லாத ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆதரவையும், பழங்குடியின பட்டியலின சமுதாய கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெறலாம் என்று பாஜக கணக்கிட்டது. அதன்படியே பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்ற பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் தன்வசம் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications