மறையாத மனிதநேயம்! ரத்தம் சொட்ட சொட்ட மீட்பு பணி செய்த பயணிகள்.. ஒடிசா ரயில் விபத்தில் நெகிழ்ச்சி
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட மீட்பு பணியில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்தில் காலை 9 மணி நிலவரப்படி 270 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

அதாவது மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இரவு 7 மணிக்கு இந்த ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலில் என்ஜின் ஏ1, ஏ2 மற்றும் பி2 முதல் பி 9 வரையிலான 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் பெட்டிகளில் பயணித்த பொதுமக்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
இதற்கிடையே தான் அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவில்லாத பொது பெட்டிகளும், ஒரு பிரேக் வேன் பெட்டியும் தடம்புரண்டது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின
இந்த கோர விபத்து நடந்த இடம் வனப்பகுதியாகும். இதனால் ரயில் விபத்து நடந்த உடனே எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் ரயில் விபத்தில் கை, கால்கள் இழந்து படுகாயத்துடன் துடிதுடித்தவர்களை லேசாக காயமடைந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பெட்டிகளில் உயிருக்கு போராடியவர்களை ரயில்களில் இருந்து வெளியே மீட்டு வந்தனர்.
இதற்கிடையே தான் அருகே உள்ள ரயில் நிலையத்தில் இருந்து அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி பயணி ஒருவர் கூறுகையில், ‛‛நான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாலை 6.40 மணிக்கு பாலசோர் ரயில் நிலையத்தில் ஏறினேன். சில நிமிடங்களில் பயங்கர சத்தம் கேட்டது. அப்போது ரயில் தடம்புரண்டு பெட்டிகள் உருக்குலைந்து கிடந்தது. ரயில் நின்ற நிலையில் நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது படுகாயத்துடன் பலபேர் போராடினார்கள். எனக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நான் 4 பேரை மீட்டேன். இதற்கிடையே அங்கு மீட்பு குழு வந்தது. அப்போது ஒருவர் என்னையும் மீட்டு தண்ணீர் கொடுத்தார். அதன்பிறகு வாகனத்தில் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்'' என்றார்.
இதேபோல் நேற்றைய ரயில் விபத்தில் லேசாக காயமடைந்த பலரும் படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதோடு கிராம மக்கள் பலரும் மீட்பு படையினருக்கு உதவியாக களம் இறங்கினர். அதோடு ரயில் விபத்து பற்றி அறிந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று நள்ளிரவில் ரத்த தானம் செய்ய குவிந்தனர். ஒடிசா ரயில் விபத்தில் பலி 270யை தொட்டு 700 பேர் வரை காயமடைந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்திய அதேவேளையில் பலரும் அடுத்தவர்களின் உயிரை காப்பாற்றும் முனைப்பில் மனிதநேயத்துடன் செயல்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications