மகாபலியும்.... பாகுபலியும்
ஓணம் பண்டிகை கொண்டாடும் போது மன்னன் மகாபலியைப் பற்றி எழுதும் நேரத்தில் பாகுபலி எங்கே வந்தார் என்று வாசகர்கள் கேட்கலாம். எனக்கென்னவோ பாகுபலியின் பாதத்தை தலையில் தாங்கிய கட்டப்பாவை பார்த்த போது பகவான் வாமனனின் பாதத்தை தலையில் ஏந்திய மகாபலி சக்கரவர்த்திதான் ஒருநிமிடம் வந்து போனார்.
திருவோண நட்சத்திரம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திர நன்னாளில்தான் வாமனன் ஆக மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தார் என்கின்றன புராணங்கள். அதே வாமனன்தான் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்டு உலகத்தை அளந்து விஸ்வரூபம் எடுத்தார்.
மகாபலிச்சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக திருவோணத்திருநாளை கொண்டாடுகின்றனர் மலையாள மக்கள். திருவோணத்திருநாள் தினத்தில் வாமன ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. தன்னிடம் தானம் கேட்ட கடவுளின் திருவடியை தன் தலைமேல் தாங்கினார் மகாபலிச் சக்கரவர்த்தி.
பாகுபலியை கடவுளாக நினைத்துக்கொண்டிருக்கும் கட்டப்பாவும் அப்படித்தான் தன் தலையில் பாகுபலியின் பாதத்தை ஏந்தியிருப்பார் என்று எண்ணத்தோன்றுகிறது. கடவுள் மீது கட்டப்பாவாக நடித்த சத்யராஜூக்கு நம்பிக்கையில்லை என்பதால் எம்.ஜி.ஆர் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்... எம்.ஜி.ஆரை நேரில் பார்த்தால் எப்படி உணர்வீர்கள் என்று சொல்லி சொல்லியே வேலை வாங்கியிருக்கிறார். கட்டப்பா சத்யராஜைப் பொருத்தவரை பாகுபலியின் உருவில் கடவுளைப் பார்த்தாரோ இல்லையோ எம்.ஜி.ஆரைப் பார்த்திருப்பார். அதனால்தான் ஆவேசமாக ஈட்டியை ஓங்கிய கரங்கள் சட்டென தாழ்ந்தது. கால்கள் மண்டியிட கண்கள் அருவியாய் பொழிய அத்தனை மகிழ்ச்சியோது பாகுபலியின் பாதத்தை எடுத்து தன் தலைமீது ஏந்திக்கொண்டார்.
மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கு மூன்றாவது அடி வைக்க இடமில்லாத காரணத்தால் தன் தலையை காட்டினார் மகாபலி சக்கரவர்த்தி. கடவுள் தன்னை ரட்சிக்க வந்திருக்கிறார் என்று அவருக்குத் தெரியும். தான் மடிவோம் என்று தெரிந்தும், கடவுள் தன்னிடம் தானம் கேட்டு விட்டாரே அவரை ஏமாற்றக்கூடாதே என்று பாதம் வைக்க தன் தலையை குனிந்து காட்டினார். இந்த கதையை படித்தும் கேட்டும் இருந்த நிலையில் பாகுபலி படம் பார்த்த தருணத்தில் அந்த காட்சி வந்து போனது.

மகிழ்ச்சியில் மலையாள மக்கள்
பண்டைய காலத்தில் இன்றைய கேரளாவை நல்லமுறையில் ஆண்டு வந்த மகாபலி மன்னன் ஆட்சியில் மக்கள் எல்லோரும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த மகாபலி வேறு யாருமல்ல விஷ்ணு பக்தன் பிரகலாதனின் பேரன்தான். அசுர அரசனுக்கு நல்ல பெயர் கிடைப்பதா என்ற பொறமையில் மகாபலி மன்னன்மீது தேவர்கள் குறை கூறினர்.

மகாபலியிடம் தானம்
மகா விஷ்ணுவின் உதவியை நாடி ‘விஸ்வஜித்' என்ற பெயரில் யாகம் நடத்தினார் மகாபலி. தேவர்கள் குறையை போக்கவும், உலகம் நிலைத்திருக்கும் வரை மகாபலி புகழுடன் விளங்க செய்யவேண்டும் என்று நினைத்த மகா விஷ்ணு மிகச் சிறிய வாமன அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்று அடி நிலம் தானம் கேட்டார்.

உலகளந்த பெருமாள்
மகாபலியும் நிலம் வழங்க தயாராக, குள்ள உருவமாக இருந்த மகாவிஷ்ணு விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும், இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றாவது அடிக்கு நிலம் கேட்க, மகாபலியோ தனது தலையை காண்பித்தார். அவரை அப்படியே அழுத்தி பாதாள லோகத்திற்குள் புதைத்தார் மகா விஷ்ணு.

மகாபலியின் வருகை
மகாபலியின் வேண்டுகோளையேற்று ஆண்டுக்கு ஒருநாள் அதாவது ஆவணி மாதம் திருவோண நாளில் மகாபலி தனது நாட்டு மக்களை காணவும் மகாவிஷ்ணுவும் வரம் கொடுத்தார். அந்த நாளே இன்றைக்கும் அறுவடை திருநாளாக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

பத்துநாள் பண்டிகை
கேரள நாட்டு மக்களை மன்னர் காண வரும் நாள் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் திருவோணத் திருநாள் பத்துநாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை பத்து நாட்களும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அத்தப்பூ கோலம்
வரும் 28ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த வாரம் முதல் பலவகை மலர்களைக் கொண்டு அத்தப் பூ கோலமிட்டு வீடுகளில் தோரணங்கள் கட்டி... கோலத்தின் நடுவில் விளக்கேற்றி வைத்து அதைச் சுற்றி நடனமாடி மகிழ்ச்சியுடன் தங்களைக் காண வரும் மன்னனை வரவேற்க தயாராக இருக்கின்றனர்.

ஓணம் விருந்து
ஓணம் சதய எனப்படும் இந்த விருந்தில் பதினாறு வகை காய்கறிகள்... அடைப்பிரதமன், சக்கப்பிரதமன் என பாயாசவகைகளோடு, நேந்திரப்பழ சிப்ஸ், வறுவல், இஞ்சிப்புளி, பப்படம் என சுவையான விருந்து சமைத்து நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து உண்டு மகிழ்வார்கள். இதைக்காணும் மகாபலி மன்னன் மகிழ்ச்சியுடன் தன் இருப்பிடம் திரும்புகிறார் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications