ஆட்டம் காட்டிய ரெமல்.. சுருண்டு போன மேற்கு வங்கம்! ஒருவர் பலி.. இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை
கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்துள்ளது. புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். சாலைகளில் மழை நீர் இன்னும் வடியவில்லை. அதேபோல மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் சாலை போக்குவரத்து இன்னும் சீராகவில்லை.
வழக்கமாக மே மாதங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் மழை பொழிவு அதிகரித்த நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் கடந்த 26ம் தேதி காலை புயலாகவும் மாறியது.

வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, புயல் தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்தது.
இது நேற்று காலை 08.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு, வங்க தேச கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடந்தது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. எனவே மேற்கு வங்கத்தில் கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன.
நேற்றிரவு மட்டும் கொல்கத்தாவில் 144 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எனவே நகரில் தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது அனைத்த பிரதான சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நீர் இன்னும் முழுமையாக வடியாததால், போக்குவரத்து தடை பட்டிருக்கிறது. எனவே மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தண்டவாளங்களிலும் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று பிற்பகல் முதல் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு விமான நிலையம் திறக்கப்பட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இயக்கப்படும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மழை நீர் சூழ்ந்ததால் சேவை தடைப்பட்டது. தற்போது வெள்ளம் ஓரளவு வடிந்துள்ளதால் குறிப்பிட்ட ரயில் நிறுத்தங்களுக்கு மட்டும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
புயல் கரையை கடந்திருந்தாலும், முர்ஷிதாபாத் மற்றும் நதியா என 2 மாவட்டங்களுக்கு மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இன்று இம்மாவட்டங்களில் 7-20 செ.மீ வரை மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர கொல்கத்தா உட்பட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், மணிக்கு 50-60 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலை உயிரிழப்பு ஒன்று பதிவாகியுள்ளது. கொல்கத்தாவின் பிபிர் பாகன் என்கிற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலிலிருந்து, புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications