பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு- அனைத்து கட்சி கூட்டத்தில் உறுதி!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்கிற பயங்கரவாதத்தை ஒடுக்குகிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருவதாக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உறுதியளித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று மாலை அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் தலைமை வகித்தனர்.

மத்திய அரசின் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் எப்படி நிகழ்ந்தது? பயங்கரவாத சக்திகளை முறியடிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அடுத்து மத்திய அரசு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் என்ன? ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டன. பின்னர் பேசிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும், ஒருமித்த குரலில், இந்த துயரமான தருணத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்தனர்.
டெல்லி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஹல்காம் தாக்குதலை அனைத்து கட்சித் தலைவர்களும் வன்மையாக கண்டித்தனர். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றார்.

அதேபோல செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருப்போம் என உறுதியளிக்கப்பட்டது என்றார்.
திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். பயங்கரவாதத்தை. ஒடுக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசும் திமுகவும் ஆதரவு தரும் என உறுதியளித்தோம் என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில், பாதுகாப்பு தரப்பில் என்ன குறைபாடுகள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதியளித்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications