ஓட்டு பிரிந்ததால் கோட்டை விட்ட காங்கிரஸ்.. திரிபுராவில் பாஜக கூட்டணி வென்றது இப்படித்தான்!
“திரிபுராவில் பாஜக அரசு மீது கடுமையாக அதிருப்தி நிலவியது. எனவே வாக்குகளை பிரிக்க பாஜக முயற்சித்தது.”
அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி 33 இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே பாஜக இதில் மீண்டும் வெற்றிபெற்று இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
நடந்து முடிந்த திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக - ஐபிஎஃப்டி கட்சியுடன் கூட்டணி அமைத்து 33 இடங்களை பிடித்து பெரும்பான்மை பெற்று இருக்கிறது. திப்ரா மோதா கட்சி 42 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வென்றுள்ளது.
அந்த கட்சி போட்டியிட்டு வெல்லாத தொகுதிகளில் 26 ல் பாஜகவும், மற்ற 3 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணியும் வென்று இருக்கிறது.

திப்ரா மோதா
மொத்தமாகவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி 60 இடங்களில் 14 தொகுதிகளில் மட்டுமே வென்று இருக்கிறது. திப்ரா மோதா கட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பிரத்யாத் தேப்பர்மாவால் தொடங்கப்பட்டது. திரிபுராவின் அரசு குடும்பத்தை சேர்ந்தவர் தெப்பர்மா.

பாஜக மீது அதிருப்தி
திரிபுராவில் 20 தொகுதிகளை உள்ளடக்கிய பழங்குடியினர் மண்டலங்களில் திப்ரா மோதா கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெறுவது கடினம் என்று கடந்த ஆண்டே தகவல்கள் பாஜக தலைமைக்கு சென்று இருக்கிறது.

குறைந்த பாஜகவின் வாக்கு சதவீதம்
இந்த நிலையில்தான் கடந்த முறை வெற்றிபெற்ற இடங்களை விட பாஜக இம்முறை குறைவான இடங்களையே பிடித்து உள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களை பிடித்தாலும் திரிபுராவில் 4 தொகுதிகளை அக்கட்சி இழந்துள்ளது. 62% வாக்கு விகிதமும் குறைந்து இருக்கிறது.

பாஜகவின் வியூகம்
இதுகுறித்து அரசியல் விமர்சகர் பிரசென்ஜித் பிஸ்வாஸ் தெரிவிக்கையில், "பாஜக அரசு மீது கடுமையாக அதிருப்தி நிலவியது. எனவே வாக்குகளை பிரிக்க பாஜக முயற்சித்தது. பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க இருந்தன. ஆனால் பேச்சுவார்த்தை ஒழுங்காக செல்லவில்லை. எனவே பாஜக எதிர்ப்பு வாக்குகள் காங்கிரஸ் - இடதுசாரிகள் மற்றும் திப்ரா மோதா ஆகிய கட்சிகள் தனித்து நின்றதால் பிரிந்தன.

தனித்தனியாக போட்டி
இதனால் பாஜகவுக்கு பலன் கிடைத்தது. காங்கிரஸ் - இடதுசாரிகள் திப்ரா மோதாவுடன் பேச்சுவார்த்தையை முறையாக செய்திருக்க வேண்டும். அதேபோல் அவர்களின் கோரிக்கையாக இருந்த தனி திப்ராலாந்து தொடர்பாகவும் பேசி இருக்க வேண்டும். பூர்வகுடி மக்களை தங்கள் வசப்படுத்தியது பாஜகவுக்கு உதவி இருக்கிறது.

பிரிந்த பாஜக வாக்குகள்
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிகள் ஒரணியில் இல்லாததால்தான். அதேநேரம் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடைந்து இருக்கிறது." என்றார். காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 2 வது இடம்பிடித்த 18 தொகுதிகளில் பாஜகவுக்கும் ஆதரவு குறைவு. அமர்பூர், சுர்மா, பானிசாகர், மஜ்லிஷ்பூர், கமல்பூர், பாபியாசாரா, தெலியமுரா, கயெர்பூர் மற்றும் பெசர்தல் ஆகிய தொகுதிகள் இதில் அடங்கும்.

குறைவான வாக்கு வித்தியாசம்
ஜோலைபாரி தொகுதியில் பாஜக கூட்டணியான ஐபிஎப்டி வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி வேட்பாளரை வென்றுள்ளது. அந்த தொகுதி திப்ரா மோதா 8,500 வாக்குகளை பெற்று இருக்கிறது. அதேபோல், சாந்திபூர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் 577 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதில் திப்ரா மோதா 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி
அதேபோல், தன்பூர், மனு, பாக்பாசா, கமலாசாகர், பிஷல்கர்ஹ், கக்ராபன் - சல்கர் மற்றும் ராஜ்நகர் தொகுதிகளில் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இரண்டாம் இடம் பிடித்தது. இந்த தொகுதிகளிலும் பாஜக பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட திப்ரா மோதா கட்சி அதிக வாக்குகளை பெற்று இருக்கிறார். இதேபோல் திப்ரா மோதா 2 வது இடம் பிடித்த தொகுதிகளில் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி வாக்குகளை பிரித்ததால் பாஜக வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications