Pahalgam Terror Attack: ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்று 'பந்த்'-ஆளும் தேசிய மாநாட்டு கட்சியும் ஆதரவு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகளைப் படுகொலை செய்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டதுக்கு ஆளும் தேசிய மாநாட்டு கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக ஜம்மு காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஶ்ரீநகரில் அவசர ஆலோசனையை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி தமது சவூதி அரேபியா பயணத்தில் இரவு விருந்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்புகிறார். பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட இருக்கிறது.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்தநாக் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான அஞ்சலிப் போராட்டங்கள் நடைபெற்றன. பல நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி, பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் இன்று ஒருநாள் முழுமையாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கல்வி நிலையங்களும் இன்று மூடப்படுகின்றன. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜம்மு காஷ்மீர் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பாஜக உள்ளிட்டவைகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நள்ளிரவிலும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிகைகளை மேற்கொண்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்யா அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications