‛‛சும்மா விடமாட்டேன்’’.. அவங்க எல்லாம் ஊழல்வாதிகள்! எதிர்க்கட்சியினரின் ஆலோசனையால் கொதித்த மோடி
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடியபோது பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியது பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களை சும்மா விடமாட்டேன் என பிரதமர் மோடி ஆக்ரோஷமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்துக்கு இன்று சென்றார்.

அங்கு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு போபாலில் இன்று பாஜக கட்சி நிர்வாகிகளுடன், பூத் பணியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இந்த வேளையில் கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆலோசனை நடத்தியது பற்றி பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். இதுபற்றி பிரதமர் மோடி கூறியதாவது:
அனைத்து ஊழல்வாதிகளும் பாட்னா ஆலோசனை கூட்டத்தில் இணைந்துள்ளனர். ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அதோடு ஊழல் செய்த தலைவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.
இந்த வேளையில் நான் உங்களிடம் ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஊழல் செய்த யாரையும் நான் சும்மா விடமாட்டேன். அவர்கள் சிறை செல்ல நேரிடும். ஊழல் செய்த எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பதால் எதிர்க்கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் கூட்டங்கள் நடத்தி ஒன்றாக இணைக்கின்றனர். காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கில் ஊழலை மட்டுமே செய்தள்ளது. ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மோசடியில் நீண்ட பட்டியலை கொண்டுள்ளன'' என சாடியிருந்தார்.
பொது சிவில் சட்டம் ஏன்? மேடையிலே விளக்கமளித்த பிரதமர் மோடி! எதிர்க்கட்சிகள் மீது கடும் ‛அட்டாக்’
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சி தலைவர்கள் சில நாட்களுக்கு முன்பு பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட 16 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அவர்கள் சூளுரைத்தனர். மேலும் பாஜகவை எதிர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் அடுத்த மாதம் துவக்கத்தில் இமாச்சல பிரதேசத்தில் இன்னொரு முறை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications