பாட்னா குண்டுவெடிப்பு: தேடப்பட்டு வந்த மேலும் 2 சதிகாரர்கள் கைது
பாட்னா: பாட்னா குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளில் மேலும் 2 பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று பாட்னாவில் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி சதிகாரர் உட்பட 6 பேர் பலியானார்கள், காயமடைந்த 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றானர்.
குண்டு வெடித்ததும் பாட்னா ரயில் நிலையத்தில் தப்பி ஓட முயன்ற இம்தியஸ் என்ற சதிகாரனை போலீசார் வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவன்தான் குண்டு வைத்த தீவிரவாதி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது குண்டு வெடிப்பு சதி பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அவன் மூலம் அம்பலமானது.

இந்தியன் முஜாகிதீன் இயக்கம்...
அதில், இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் இயக்கமே காரணம் என்பதும் அதன் தலைவனாக செயல்பட்டு வந்த யாசின் பத்கல் கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தெக்சின் அக்தர் என்பவன் இயக்கத்தை வழிநடத்தி சென்றதும், தலைமறைவாக இருக்கும் அவன்தான் நரேந்திரமோடி கூட்டத்தில் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினான் என்பதும் உறுதியானது.

18 சதிகாரர்கள்....
நரேந்திரமோடி கூட்டத்தில் 18 இடங்களில் குண்டு வைக்க 18 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அதில் ஒருவன் குண்டு வெடிப்பில் பலியாகி விட்டான். பிடிபட்ட இம்தியாஸ் பாட்னா ரெயில் நிலையத்தில் குண்டு வைத்தபோது போலீசில் சிக்கினான்.

தேடுதல் வேட்டை....
இம்தியஸ் கொடுத்த தகவலின்பேரில் குண்டு வைத்த மற்ற 16 பேரையும் தேடி வருகிறார்கள். இவர்களில் ஏற்கனவே 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மேலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப் பட்டான். பாட்னாவில் உள்ள மோதிஹரி என்ற இடத்தில் அவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவன் பெயர் ஹைதர்அலி என்ற அப்துல்லா.

2 பேர் கைது....
அப்துல்லா தான் இம்தியாசை, இந்தியன் முஜாகிதீன் தலைவன் தெக்சின் அக்தரிடம் அறிமுகப்படுத்தினான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தேடப்பட்டு வந்த சந்தேகத்திற்குரிய மேலும் 2 நபர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பிடிவட்டவர்கள் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

கவலைக்கிடம்....
இந்நிலையில், குண்டு வெடிப்பில் காயமடைந்த நிலையில் போலீசாரிடம் பிடிபட்ட முக்கிய தீவிரவாதி தாரிக் என்பவனது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர் காக்கும் உபகரணங்களின் உதவியுடன் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாட்னா இந்திரா காந்தி ஆஸ்பத்திரி இயக்குனர் அருண் குமார் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications