தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றாத அமித்ஷா.. தேர்தலை புறக்கணித்த 4 லட்சம் மக்கள்! நாகாலாந்தில் ஷாக்
கொஹிமா: கிழக்கு நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கிற தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், சுமார் 4 லட்சம் நாகாலாந்து மக்கள் வாக்களிக்காமல் லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எனவே, நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைந்தன. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 102 தொகுதிகளில் நாகாலாந்து மாநிலத்தின் ஒரு தொகுதியும் அடக்கம். ஆனால் கிழக்கு நாகாலாந்து மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலை முழுவதுமாக புறக்கணித்துள்ளனர். கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை இணைத்து புதிய மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இம்மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்திருக்கிறார்கள்.
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது புதியதாக மாநிலம் பிரிக்கப்படவில்லை எனில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறினார்கள். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி புதிய மாநிலம் குறித்து மக்களுக்கு வாக்குறுதியளித்தார். எனவே மக்கள் வாக்களித்தனர். ஆனால், அமித்ஷா வாக்குறுதியளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் இந்த மாநில கோரிக்கை ஏற்கப்படாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை தூண்டியிருக்கிறது.
எனவே, கிழக்கு நாகாலாந்தின் 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 லட்சம் நாகாலாந்து மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இந்த 6 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு என்பது 0% ஆக இருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், நாகாலாந்து மக்களை தூண்டிவிட்டு, வாக்களிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 'கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு' மீது தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்த அமைப்புக்கு வடகிழக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், "கிழக்கு நாகாலாந்து மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் விஷயத்தில் 'கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு' தனது செல்வாக்கை பயன்படுத்தி குறுக்கீடு செய்திருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இந்த அமைப்பின் தலைமை மீது ஏன் இந்திய தண்டனைச் சட்டத்தின் 171-சி'யின் உட்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கு இந்த அமைப்பு விளக்கமாக பதிலளித்திருக்கிறது. அதில், "எங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கிழக்கு நாகாலாந்து பகுதியில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் சமூகவிரோதிகளால் ஏற்படும் ஆபத்தை குறைப்பதுதான் எங்களது குறிக்கோள். கிழக்கு நாகாலாந்து பகுதி தற்போது பொது அவசரநிலையில் உள்ளது. இது மக்கள் எடுத்த முடிவு. இதற்கு எப்படி இந்திய தண்டனை சட்டம் 171 - சி பொருந்தும்? நாங்கள் யாரையும் தடுக்கவில்லை. இது தவறான புரிதல். இது குறித்து விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.
இந்த முடிவு ஏதோ ஓரிரு நாளில் எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க கிழக்கு நாகாலாந்து மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறது.
வடகிழக்கில் ஏற்கெனவே மணிப்பூர் பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நாகாலாந்திலும் சலசலப்பு கிளம்பியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications