ரயில் உணவில் இனி அளவு, தேதி குறிப்பிடுவது அவசியம் - பியூஸ் கோயல் திட்டம்!
ரயில்வே உணவின் தரத்தை மேம்படுத்து புதிய அறிவிப்பை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.
டெல்லி : ரயில்களில் உணவு வழங்கும் போது அதன் அளவு, தயார் செய்யப்பட்ட தேதி மற்றும் ஒப்பந்ததாரரின் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் சாமானிய மக்களின் பயண நண்பன் என்றால் அது ரயில் பயணம் மட்டுமே. ஆனால் ரயில் பயணத்தின் போது பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அதில் முதலில் இருப்பது தரமில்லாத உணவு.
ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு உண்ணத்தகுந்ததல் என்று சிஏஜி அறிக்கையிலும் சுட்டி காட்டியிருந்தது. இதனையடுத்து ரயில் உணவின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அப்போது அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு கூறியிருந்தார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ரயில்வே துறை பியூஸ் கோயலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள் அறிவிப்பு
இந்நிலையில் அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவின் பேரில் ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் சஞ்சீவ் கார்க் அனைத்து ரெயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் இனி ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் எடை, உணவு விநியோகிப்பவர் அல்லது ஒப்பந்ததாரரின் பெயர் இடம் பெற வேண்டும்.

தரத்தை உயர்த்த நடவடிக்கை
அதுமட்டுமின்றி உணவு எப்போது தயாரிக்கப்பட்டது என்று தேதியும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் இடம்பெற வேண்டும்
மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் உணவு சைவ உணவா அல்லது அசைவ உணவா என்பதை குறிப்பிடும் முறை தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவு பொட்டலத்திலும், இந்த விவரங்கள் இருக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

உடனடியாக அமல்
இந்த வழிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 5ந்தேதி அமைச்சர் பியூஸ் கோயல் பிறப்பித்துள்ள உத்தரவில் ரயிலில் வழங்கப்படும் உணவின் சுகாதாரம் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications