வீடுகள், நகைகளை கூட காங்கிரஸ் பறித்துக் கொள்ளும்.. சர்ச்சைக்கு நடுவே பிரதமர் மோடி மீண்டும் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் நகைகள், வீடுகள் என்று அனைத்தையும் பறித்துக் கொள்ளும் என்று பேசியுள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்றும் செல்வத்தை எல்லாம் பறித்துக் கொள்வார்கள் என்றும் பேசியிருந்தார்.

இது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், பலரும் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த சர்ச்சையே ஓயாத நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மக்கள் செல்வத்தைப் பறித்துவிடும் என்று மோடி மீண்டும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி: அங்குப் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா கூட்டணிக் கட்சிகள் தங்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்துவிட்டன. மோடி ஏன் பாஜக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வளர்ந்த இந்தியாவைப் பற்றிப் பேசுகிறார்? ஏன் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுகிறார்? என்று நாட்டின் வளர்ச்சி குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை இல்லை.. அதிகாரப் பேராசை மட்டுமே இருக்கிறது. அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்.. அது குறித்து நான் எச்சரிக்க விரும்புகிறேன்.. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி இப்போது உங்கள் வருமானம், உங்களின் சொத்துக்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறது.. இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தால் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள், எத்தனை வீடுகள் வைத்திருக்கிறார்கள் என்று விசாரணை நடத்துவோம் என்று காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) கூறியிருக்கிறார்.
நகைகளைப் பறித்துவிடுவார்கள்: உங்களின் சொத்துக்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் போகிறார்களாம்... அதை அவர்கள் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தை மாற்றி பெண்களின் நகைகளைப் பறிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.. மாத சம்பளம் பெறுவோர் வங்கியில் எவ்வளவு முதலீடு செய்துள்ளனர், எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறார்கள், எவ்வளவு நிலம் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் கணக்கெடுக்கப் போகிறார்களாம். அந்த சர்வே நடத்தி உங்களின் சொத்தை பறிமுதல் செய்யப் போகிறார்கள்.
வீடு இருக்கா: நீங்கள் யாராவது உங்கள் கிராமத்தில் பரம்பரை வீடு வைத்திருந்தால், நகரத்தில் ஒரு பிளாட் வாங்கினால், அதில் ஒரு வீட்டைக் காங்கிரஸ் பறித்துவிடும். உங்களுக்கு ஏற்கனவே சொந்த வீடு இருப்பதால், உங்களுக்கு வேறு வீடு தேவையில்லை என்றும் காங்கிரஸ் கூறுகிறது. இது மாவோயிஸ்ட் மனநிலை, கம்யூனிஸ்ட் மனநிலை.. கம்யூனிஸ்ட்கள் பல நாடுகளை நாசமாக்கியுள்ளனர். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நமது நாட்டிலும் அதையே செய்ய விரும்புகிறார்கள்" என்றார்.
தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் நாடு தழுவிய அளவில் சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியிருந்தது. அதாவது காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சமூக நீதி என்ற பிரிவில், "கடந்த 70 ஆண்டுகளாகவே பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் முன்னேற்றத்திற்காகக் காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருகிறது. இருப்பினும், சாதிப் பாகுபாடு இன்னும் தொடர்கிறது. SC, ST மற்றும் OBC சமூகங்கள் இன்னும் பின்னால் இருக்கிறார்கள்.
இந்த OBC, SC மற்றும் ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்திய மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் வரை இருக்கிறார்கள். இருப்பினும், உயர் தொழில்கள், வணிகங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. எந்தவொரு நவீன சமுதாயமும் சாதி ரீதியான இந்த சமத்துவமின்மை அல்லது பாகுபாடு மற்றும் இதனால் சம வாய்ப்பு மறுக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ளாது.
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும். அதில் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று கூறப்பட்டு இருந்தது. அதில் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்த எந்தவொரு பாயிண்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications