நேதாஜி குடும்பத்தினர் 50 பேருக்கு மோடி அழைப்பு: அக்டோபரில் பிரதமர் வீட்டில் சந்திப்பு
டெல்லி: நேதாஜி குடும்பத்தினர் 50 பேரை அக்டோபர் மாதம் சந்திக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், நேதாஜி பற்றி மத்திய அரசிடம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடப்போவதாக அறிவித்ததோடு 64 பக்க ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடந்த 8 நாட்களில் மட்டும் 7 முறை நேதாஜி குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜி குடும்பத்தினரை அடுத்த மாதம் சந்தித்து பேச உள்ளார்.
அந்த சந்திப்பின்போது, நேதாஜி குடும்பத்தினர் கேட்க விரும்பும் கேள்விகள், என்னென்ன விஷயங்கள் குறித்து பிரதமர் கூற வேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதுபோன்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் வானொலியில் மாதந்தோறும் ‘மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி நேற்று தனது 12வது உரையை நிகழ்த்தினார் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளது பற்றி தெரிவித்தார்.

நேதாஜி குடும்பத்தினர்
கடந்த மே மாதம் கொல்கத்தா சென்றிருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் குடும்பத்தினர் சிலரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, நேதாஜியின் குடும்பத்தினர் அனைவரையும் சந்திக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவரது குடும்ப உறுப்பினர் 50 பேர் அடுத்த மாதம் பிரதமர் இல்லத்துக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சந்திப்பதில் மகிழ்ச்சி
இந்த சந்திப்பிற்காக, பல்வேறு நாடுகளில் வசிக்கும் நேதாஜி குடும்பத்தினர் முதல் முறையாக ஒன்று கூடுகின்றனர். வேறு எந்த பிரதமருக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

கதராடை விற்பனை
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தியின்போது, அனைவரும் ஒரு கதர் ஆடையையாவது வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இதன் மூலம் காதி பொருட்கள் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது.

தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அனைத்து தெருவிலும் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என ஒரு சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான். இது எனக்கு திருப்தி அளிக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தை கடந்தாண்டு அக்டோபர்2ம் தேதி தொடங்கினேன். இத்திட்டத்தை பற்றி அரசை பலர் விமர்சிக்கின்றனர்.

நல்ல தொடக்கம்
மோடி தூய்மை பற்றி பெரிய அளவில் பேசினார். ஆனால் எதுவுமே மாறவில்லையே என்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. தூய்மையை பற்றி நாடாளுமன்றத்திலிருந்து தெருமுனை வரை பேச வைத்திருப்பதையே நல்ல தொடக்கமாக கருதுகிறேன். விரைவில் இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

சமையல் எரிவாயு மானியம்
சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத் தர வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று 30 லட்சம் பேர் காஸ் மானியத்தை துறந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து பிரதமர் தனது உரையில் பீகார் தேர்தல் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.












Click it and Unblock the Notifications