மோடி தீபாவளி டிரெஸ் கூட போடலயே.. இமாச்சலில் இந்திய படையினருடன் ராணுவ உடையணிந்து நிற்கும் பிரதமர்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளியை கொண்டாடினார்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகளை உடுத்தியும், இனிப்பு, பலகாரங்களை சாப்பிட்டும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். அதே சமயம் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றத்தில் இருந்தே தீபாவளி பண்டிகையை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நம் நாட்டு ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு சியாச்சின், 2015 ஆம் ஆண்டு அமிர்தசரஸ், 2016 ஆம் ஆண்டு லாஹவுல் - ஸ்பிடி, 2017: குரேஸ், 2018 ஆம் ஆண்டு சாமோலி, 2019 ஆம் ஆண்டு ரஜோரி, 2020 ஆம் ஆண்டு ஜெய்சால்மர், 2021 ஆம் ஆண்டு நௌஷேரா, 2022 ஆம் ஆண்டு கார்கில் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களை சந்தித்து தீபாவளியை கொண்டாடினார். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச மாநிலம் லிப்சா பகுதியில் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
சீன எல்லை பகுதியில் அமைந்து இருக்கும் இந்த லிப்சா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும்இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு போலீசாருடன் தீபாவளி பண்டிகையை அவர் கொண்டாடி வருகிறார். இதுகுறித்து அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் நான் நமது பாதுகாப்பு படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறேன்.
எங்கு ராமர் இருக்கிறாரோ அங்கு அயோத்தி இருக்கும் என்பார்கள். ஆனால், எனக்கு எங்கு பாதுகாப்பு படையினர் உள்ளார்களோ அங்குதான் பண்டிகை. நான் 30 முதல் 35 ஆண்டுகளாக உங்களோடு இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது கிடையாது. நான் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இல்லாதபோது, ஏதாவது ஒரு எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுவேன்." என்றார்.


Click it and Unblock the Notifications
