மோடியின் ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி மரணம்.. ரிஷிகேஷ் ஆசிரமத்தில் உயிர் பிரிந்தது!!
ரிஷிகேஷ்: பிரதமர் மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. ரிஷிகேஷில் உள்ள தனது ஆசிரமத்தில் அவர் மரணமடைந்தார். அவரது மரணச் செய்தியை அவரது நெருங்கிய உதவியாளரும், தயானந்த் ஆசிரமத்தின் டிரஸ்டியுமான சாந்தமானந்த் சரஸ்வதி அறிவித்தார்.
நீண்ட காலமாக உடல் நலமற்ற நிலையில் இருந்து வந்தார் சுவாமி தயானந்த சரஸ்வதி. 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஜாலிகிரான்ட் ஹிமாலயன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து ஆசிரமத்திற்குக் கூட்டி வந்திருந்தனர். ஆனால் வந்தது முதலே தயானந்த சரஸ்வதியின் உடல் நிலை மோசமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் தயானந்த சரஸ்வதியை தங்களது குருவாக வரித்துக் கொண்டவர்கள். செப்டம்பர் 11ம் தேதிதான் தயானந்த சரஸ்வதியை பிரதமர் மோடி நேரில் பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்திருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
1930ம் ஆண்டு தமிழகத்தின் மஞ்சக்குடியில் பிறந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. இவரது இயற்பெயர் நடராஜன் என்பதாகும்.
அத்வைதம் மீது ஈடுபாடு கொண்ட அவர் ஆன்மீகத்தின் பக்கம் சிறு வயதிலேயே திரும்பினார். சுவாமி சின்மயனாந்தாவின் கோட்பாடுகள் இவரைக் கவர்ந்தன.
சுவாம் சின்மயனாந்தாவிடம் இணைந்து செயல்படட்டு வந்தார். 1962ம் ஆண்டு சன்னியாசம் பெற்று சுவாமி தயானந்த சரஸ்வதியாக மாறினார். மும்பையில் வேதாந்தம் கற்பதற்காக சாந்திபனி சதானலயா என்ற அமைப்பை சின்மயனந்தாவும், தயானந்த சரஸ்வதியும் இணைந்து நிர்மானித்தனர்.
அதேபோல கோவை அருகே ஆனைக்கட்டியில் உள்ள ஆர்ஷா வித்யா குருகுலமும் இவர்களால் நிறுவப்பட்டது. இங்கு நூற்றுக்கணக்கானோர் கற்கின்றனர்.
நாட்டில் உள்ள அனைத்துத் துறவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஆச்சார்யா சபா என்ற அமைப்பையும் நிறுவினார் தயானந்த சரஸ்வதி.
Swami Dayananda Saraswati ji's demise is a personal loss. I pray that his soul attains eternal peace.
— Narendra Modi (@narendramodi) September 24, 2015 பிரதமர் மோடி இரங்கல்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு சென்றடைந்ததும் ட்விட்டர் மூலம் தமது ஆன்மீக குருவான தயானந்த சரஸ்வதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பதிவில் "சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவரது ஆன்மா நித்திய சமாதானத்தை அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் அறிவு, ஆன்மீகம் மற்றும் சேவை அடங்கிய சக்திப் பெட்டகம்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications