“என்ன வேண்டுமானாலும் செய்வேன்”.. நிதிஷ் குமார் & இந்தியா கூட்டணி தலைவர்களை விளாசிய பிரதமர் மோடி!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் சரமாரியாக விளாசினார்.
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.5 மாநில தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 5 மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக மத்திய பிரதேசத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசிய சர்ச்சைக்குரிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, 'இந்தியா' கூட்டணியை சரமாரியாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டது.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் நேற்று வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார்.
மேலும், மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, தனது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும், அதனை திரும்பப் பெற்று கொள்வதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். எனினும், மத்திய பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, நிதிஷ் குமாரையும், இந்தியா கூட்டணி கட்சியினரையும் இதைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெண்களுக்கு "மரியாதை" என்ற பெயரில், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்கட்சியினர் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.
ஒரு மாநில சட்டசபையில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சர்ச்சையா. க வார்த்தைகளை பயன்படுத்தினார் அம்மாநில முதல்வர். அதற்காக அவர் வெட்கப்படவே இல்லைஎதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் கூட பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்படிப்பட்ட பார்வை கொண்டவர்கள், உங்கள் மரியாதையை எப்படிக் காப்பாற்றுவார்கள்?
அவர்கள் எந்த அளவுக்கு தாழ்ந்து போவார்கள என்பது இதில் இருந்து தெரிகிறது. இதனால் நாட்டுக்கு ஒரு துரதிஷ்டமான நிலை. உலகத்தின் முன் இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள். தாய்மார்களே, சகோதரிகளே... உங்கள் மரியாதையை உறுதிப்படுத்த என்னால் முடிந்த எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி காட்டமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications