"கங்கை தாய் வீட்டிற்கே வந்திருக்கு.." பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்.. அசராமல் பூஜை செய்த உபி காவலர்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது பல இடங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அங்குப் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அங்குத் துணை ஆய்வாளர் வீட்டில் வெள்ளம் புகுந்த நிலையில், கங்கை அன்னை வீட்டிற்கு வந்ததாகச் சொல்லி அவர் பூஜை செய்த சம்பவம் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வட இந்தியாவில் இப்போது கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் தான் உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு காரணமாக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. அதில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகினர். அங்கு மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

உத்தர பிரதேச வெள்ளம்
அதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில், பாதிப்புகள் மோசமாக இருக்கிறது. இந்த பெருவெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படி அங்கு பல்வேறு இடங்களில் மக்கள் வெள்ளத்தால் துயரத்தைச் சந்தித்து வரும் நிலையில் துணை ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத் வீட்டில் பூஜை செய்திருக்கிறார்.
அதாவது துணை ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத் வீட்டிற்குள் கங்கை வெள்ளநீர் புகுந்த நிலையில், அதை அவர் பக்தியுடன் வரவேற்று வழிபாடு செய்துள்ளார். கங்கை தாயே தனது வீட்டிற்கு வந்திருப்பதாகச் சொல்லி அவர் பூஜை செய்திருக்கிறார். இதை அவர் போட்டோவாகவும் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது பேசுபொருள் ஆகியுள்ளது.
நிலைமை மோசம்
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பெய்து வரும் தொடர் கனமழையால் அங்குள்ள கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு நகரின் பல தாழ்வான பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்கள் பலரும் தங்கள் இருப்பிடங்களை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று வருகிறார்கள்.
பூஜை செய்த காவலர்
இந்தச் சூழலில் தான் சந்திரதீப் நிஷாத் கங்கை வெள்ளத்திற்குப் பூஜை செய்திருக்கிறார். வீட்டில் வெள்ளம் புகுந்து வந்த நிலையில், அவர் பால் மற்றும் மலர்களைக் கொண்டு ஆரத்தி எடுத்து நிஷாத் வழிபாடு செய்திருக்கிறார். இது தொடர்பான போட்டோவும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சந்திரதீப் நிஷாத் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கங்கை வெள்ளத்திற்குப் பூஜை செய்யும் வீடியோவை எடுத்து நிஷாத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மேலும் அவர், "இன்று காலை நான் வேலைக்குச் செல்லும்போது கங்கை அன்னை எங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டார். எங்கள் வாசலிலேயே அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றோம். ஜெய் கங்கா!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனித நீராடல்
அதேபோல அவர் மற்றொரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நிஷாத்தின் வீட்டில் இடுப்பளவு தண்ணீர் வந்துவிட்டது. இடுப்பளவு வெள்ள நீரில் நடந்து சென்று, அவர் கங்கை அன்னையை வழிபடுவதாகப் பதிவிட்டுள்ளார். அவர் மேலும், "இன்று கங்கை அன்னை முழுமையாக என் வீட்டிற்குள் வந்துவிட்டாள். என் வீட்டிற்குள்ளேயே நான் புனித நீராடினேன். ஜெய் கங்கா!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு சிலர் மட்டும் கங்கை நதி மீதான அவரது பக்தியைப் பக்தியை பாராட்டுகிறார்கள். அதேநேரம் பெரும்பாலானோர் கங்கை நதி வெள்ளம் இந்தளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், மக்களைக் காப்பாற்றாமல் காவல் அதிகாரி ஒருவர் இதுபோல செய்வது வேதனை அளிப்பதாகவே பலரும் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications