யாகூப் மேமனின் தூக்கை ரத்து செய்ய பா.ஜ.க, காங். தி.மு.க., இடதுசாரிகள் கோரிக்கை- ஜனாதிபதிக்கு மனு!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைத்து அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பா.ஜ.க, காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு புதிய கருணை மனுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து யாகூப் மேமன் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. யாகூப் மேமனின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30-ந் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார்.
இந்நிலையில் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு பாஜக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு ஞாயிற்றுக்கிழமை மனு அளித்துள்ளனர்.
சத்ருஹன் சின்ஹா (பாஜக), மணிசங்கர் ஐயர் (காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத் (மார்க்சிஸ்ட்), திருச்சி சிவா (திமுக) உள்ளிட்ட எம்.பி.க்களும், மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, காந்தியின் பேரன் துஷார் காந்தி, நீதிபதிகள் கே.சந்துரு, சிவசுப்ரமணியன், பார்கவா, ஆர்.எஸ்.பேடி, சமூக ஆர்வலர் அருணா ராய், நடிகர்கள் நசிருதீன் ஷா, முகேஷ் பட் உள்பட நூற்றுக்கணக்கானோர் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளாக யாகூப் மேமன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மன அழுத்த நோய் இருப்பதாக சிறை மருத்துவரே சான்றிதழ் அளித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 10 பேர், நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைக் காரணமாக வைத்து உச்ச நீதிமன்றம் அவர்களது தண்டனையைக் குறைத்தது.
அதேபோல், யாகூப் மேமனும் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால் அவரது தண்டனையையும் குறைக்கலாம். தீவிரவாத நடவடிக்கைகளை நம் நாடு ஒருபோதும் பொறுத்துக் கொண்டிருக்காது. அதே நேரத்தில் கருணை, மன்னிப்பு உள்ளிட்ட விஷயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. எனவே, கருணை அடிப்படையிலும், சட்டரீதியாக உள்ள சாதக அம்சங்களையும் கொண்டு யாகூப் மேமனின் மரண தண்டனையை ரத்து செய்து, அவரை தூக்குக் கயிற்றிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications