அமைதியாக 5வது கட்ட தேர்தல்: மே.வங்கம்- 70%, மணிப்பூர் - 65%, கர்நாடகா- 56% வாக்குப் பதிவு!!
டெல்லி: லோக்சபா தேர்தலின் 5வது கட்டமாக 12 மாநிலங்களில் 121 தொகுதிகளில் விறுவிறுப்பான அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 70%, மணிப்பூரில் 65% வாக்குகள் பதிவாகி இருந்தன.
நாட்டின் 16வது லோக்சபாவுக்கான தேர்தல் ஏப்ரல் 7ந் தேதி முதல் மே 12ந் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரையில் 4 கட்டங்களாக நடந்த தேர்தலில் 112 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
எஞ்சிய 431 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 5வது கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

12 மாநிலங்களில்..
அசாமில் 6 தொகுதிகளிலும் பீகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 7 தொகுதிகளிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், ஜார்கண்டில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும், ஒடிசாவில் 11 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 20 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலுமாக மொத்தம் 12 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒடிஷா சட்டசபைக்கு இறுதி கட்டம்
ஒடிஷா மாநிலத்தில் இறுதி கட்டமாக 77 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு மட்டும் 1 கோடியே 60 லட்சம் பேர் வாக்காளர்கள்...

1762 வேட்பாளர்கள்
இன்றைய தேர்தலை மொத்தம் 1,762 வேட்பாளர்கள் எதிர்கொண்டனர்.

16.61 கோடி வாக்காளர்..
மொத்தம் 16.61 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலுக்கான வாக்காளர்கள்

தேர்தலை எதிர்கொண்ட பிரபலங்கள்..
இன்றைய தேர்தலை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், நந்தன் நிலகேனி, லாலு மகள் மிசா பாரதி., மேனகா காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, சரத்பவார் மகள் சுப்ரியா சுலு ஆகியோர் எதிர்கொண்டனர்.

மாலை 5 மணி வரை...
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடைபெற்றது.

மே.வங்கத்தில் 70% வாக்கு பதிவு
12 மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் மிக அதிபட்சமாக 70% வாக்குகள் பதிவாகின. மணிப்பூரில் 65%. கர்நாடகத்தில் 56% வாக்குகள் பதிவாகின.

ஜார்க்கண்ட்டில் 55%
மேலும் உ.பி.யில் 50%, ராஜஸ்தான் 54%, காஷ்மீர் 59%, சத்தீஸ்கர்- 60%, ஜார்க்கண்ட் 55%, பீகார் 44%, மத்திய பிரதேசத்தில் 40%, மகாராஷ்டிராவில் 31 வாக்குகள் பதிவாகி இருந்தன.

நவீன்பட்நாயக், வீரப்ப மொய்லி
இன்று வாக்களித்த பிரபலங்கள்: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், லாலு மகள் மிசா பாரதி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி,

ஜஸ்வந்த்சிங்.. திக்விஜய்சிங்
இன்று வாக்களித்த பிரபலங்கள்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங், காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், சுரேஷ் கல்மாடி, பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்,

கெலாட், நிதீஷ்குமார்
இன்று வாக்களித்த பிரபலங்கள்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, நந்தன் நிலகேனி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இன்று வாக்களித்தனர்.

மாவோயிஸ்டுகள் கை ஓங்கியது!
ஒடிஷாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பகுதியில் பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மல்காங்கிரி பகுதியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த போதும் எவருமே வாக்களிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலு மகள் மீது புகார்
பீகாரில் வாக்குச் சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரியை லாலு மகள் தள்ளிவிட்ட போது வாக்குப் பதிவு இயந்திரம் உடைந்ததாக புகார் கூறப்பட்டது. இதனால் லாலு மகள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிபி வாக்களிக்கவில்லை..
பீகார் மாநில டிஜிபியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால் அவர் வாக்களிக்கவில்லை.

இரோம் ஷர்மிளாவுக்கு மறுப்பு
மணிப்பூரில் மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளாவுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இரோம் ஷர்மிளா மருத்துவமனையில் இருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இரோம் ஷர்மிளா, தாம் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க விரும்பியதாக தெரிவித்திருந்தார்.

போராளிகள் வாக்களிப்பு
மணிப்பூரில் மத்தியஅரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்ட போராளிகளும் இயக்க சீருடையில் வந்து வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications