‛வாங்களேன் ஒரு ரவுண்ட் போவோம்’.. திடீரென சுகோய் போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு!
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று 2 இருக்கை கொண்ட ‛சுகோய் 30-எம்கேஐ' ரக போர் விமானத்தில் திடீரென்று பறந்து அசத்தினார். இதற்கு முன்பு கடந்த 2009 ம் ஆண்டில் போர் விமானத்தில் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பறந்த நிலையில் அவருக்கு அடுத்தபடியாக பெண் பிரதமராக உள்ள திரெளபதி முர்மு இன்று முதல் முறையாக போர் விமானத்தில் பறந்தார்.
இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அசாமில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி முதல் இன்று வரை 3 நாள் அரசு முறை பயணமாக திரெளபதி முர்மு அசாம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் திரெளபதி முர்மு பங்கேற்று வந்தார்.

சுற்றுப்பயணத்தின் கடைசி நான இன்று திரெளபதி முர்மு அஸ்ஸாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்துக்கு சென்றார். அங்குள்ள போர் விமானங்களை அவர் பார்த்தார்.
அதன்பிறகு போர் விமானங்களின் செயல்பாடு, மற்றும் ஒவ்வொரு போர் விமானங்கள் இயங்கும் முறை உள்ளிட்டவற்றை திரெளபதி முர்மு அங்கிருந்த விமானப்படை அதிகாரிகளிடம் ஆர்வமாக கேட்டறிந்தார். அதன்பிறகு திரெளபதி முர்மு விமானப்படை பைலட்டின் யூனிபார்ம், ஹெல்மெட் அணிந்து ‛சுகோய் -30 எம்கேஐ' எனும் போர் விமானத்தில் பயணம் செய்தார்.

இந்த விமானம் 2 இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கும். இந்நிலையில் தான் ஒரு இருக்கையில் பைலட் இருக்க, இன்னொரு இருக்கையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அமர்ந்து பயணித்தார். போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணிப்பது இதுதான் முதல் முறையாகும்.

சுகோய்-30 எம்கேஐ என்பது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 2 இருக்கைகள் கொண்ட மல்டிரோல் போர் விமானமாகும். தற்போது இந்திய விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உரிமம் பெற்று தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படைகளின் சூப்ரீம் கமாண்டர் என்றால் அது ஜனாதிபதி தான். அதாவது முப்படைகளில் உச்சபட்ச அதிகாரம் பெற்ற நபராக ஜனாதிபதி இருக்கிறார். இதற்கு முன்பு கடந்த 2009 காலத்தில் அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பயணம் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பெண் ஜனாதிபதியாக செயல்பட்டு வரும் திரெளபதி முர்மு இன்று சுகோய் -30 எம்கேஐ ரக போர் விமானத்தில் பறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications