'தொலைநோக்கு பார்வையின்மை, புரிதலின்மை, பொய்களை கட்டவிழ்ப்பது'.. மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி தனது புரிதலின்மை மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததை மறைக்கவே தற்போதுள்ள நெருக்கடியைப் புறக்கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் இரண்டாம் அலை நாட்டை சூறாவளிபோல தாக்கி வருவதாகவும் மக்கள் நினைத்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் பேசினார்.
இந்நிலையில், நாட்டின் முக்கிய தேர்தல் ஆலோசகர்களில் ஒருவரான பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடியை மிகக் கடுமையாகச் சாடி ட்வீட் செய்துள்ளார். மோடி அரசு தற்போதுள்ள நெருக்கடியைக் கையாளும் விதம் என பிரசாந்த் கிஷோர் நான்கு விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில்,
1. புரிதல் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததால் சிக்கலைப் புறக்கணித்தல்
2. திடீரென அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, வெற்றியடையப் பொய்களை கட்டவிழுத்துவிடுவது
3. சிக்கல் தொடரும்பட்சத்தில், அதற்குக் காரணம் மற்றவர்கள்தான் என மடைமாற்றிவிடுதல்
4. அதேநேரம் சூழ்நிலை மேம்பட்டால் பக்த் ராணுவத்தின் துணையுடன் அதற்கான புகழை எடுத்துக்கொள்ளுதல் " என்று பிரசாந்த் கிஷோர் மிகக் கடுமையாகப் பிரதமர் மோடியை தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார்,
பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் ஆலோசகராக பணிபுரிகிறார். இந்தத் தேர்தலில் பாஜக 100 இடங்களைத் தாண்டினால், அவர் தனது தொழிலை விட்டுவிடுவதாகச் சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
