ஒரே மேடையில் மோடி - நிதிஷ்: மோடியை வாழ்த்தி கோஷமிட்டதால் பரபரப்பு !
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ரயில்வே நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அம் மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி தோல்வி கண்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஹஜிபூர் பகுதியில் நடைபெற்ற ரயில்வே விழாவில் இரு துருவங்களாக இருந்த பிரதமர் மோடியும் , பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் தோன்றி தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

அப்போது திகா-சோனேபூர் ரயில் பாதை அருகே 2 ஆயிரத்து 921 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சாலைப் பாலத்தையும், முங்கர் பகுதியில் 2 ஆயிரத்து 274 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய மோடி, திகா - சோனேபூர் ரயில் பாதை விரைவாக நிறைவேறியதற்கு மத்திய, மாநில அரசின் ஒத்துழைப்பே காரணம் என தெரிவித்தார். வாஜ்பாய் முன்னாள் பிரதமராக இருந்த போது நிதிஷ் குமார் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது அவர் பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.
பின்னர் பேசிய நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தில் பல்வேறு விழாவிற்கு நேரம் ஒதுக்கி வருகை தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அப்போது தொண்டர்கள் 'மோடி மோடி' என கோஷமிட்டதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மோடி அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அரசியல் அரங்கில் கடும் விமர்சனங்களை வைத்து, இரு துருவங்களாக இருந்த இருவரும், மேடையில் ஒருவரை ஒருவர் பாராட்டி பேசியதும் ஒரே மேடையில் தோன்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications