லாக்டவுன் போட்டதால் நடந்தே போன தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் உதவியது குற்றமா? மோடிக்கு பிரியங்கா கேள்வி
பானாஜி: கொரோனாவை காங்கிரஸ் பரப்பியதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ‛‛கொரோனா காலத்தில் உங்கள் பெரிய பொதுக்கூட்டங்கள் பற்றி என்ன சொல்கிறார் '' என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பார்லிமெண்டில் பேசியபோது, ‛‛கொரோனா முதல் அலையின்போது மும்பை புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட்டை காங்கிரஸ் வழங்கியது. அதேநேரத்தில் டெல்லி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆம்ஆத்மி அரசு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் தான் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா பரவியது'' என்றார்.

இதற்கு நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலளித்தார். கோவா பானாஜியில் அவர் பிரதமர் மோடியை தாக்கி பேசினார். பிரியங்கா கூறியதாவது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவாமல் பிரதமர் மோடி கைவிட்டார். இதனால் அவர்கள் சொந்தஊர் செல்ல முடியாமல் தவித்தனர். கால்வலிக்க நடந்தே ஊர் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் உதவி செய்தோம். பிறருக்கு உதவி செய்யாத மோடி, உதவி செய்வோரையும் குற்றம்சாட்டுகிறார்'' என பதிலளித்தார்.
மேலும், ‛‛புலம்பெயர் தொழிலாளர்களுக்கு யாரும் உதவக்கூடாது என பிரதமர் மோடி நினைக்கிறாரா. இல்லை, வேறு ஏதேனும் கூறவிரும்புகிறாரா. மோடி என்ன சொல்ல விரும்புகிறார். கொரோனா காலத்தில் அவர் பங்கேற்ற பெரிய பொதுக்கூட்டங்கள் பற்றி என்ன சொல்கிறார்'' என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications