பெண் மருத்துவர் கொலை.. எங்களுக்கு நம்பிக்கையே இல்லை! மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்
கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் சிபிஐ விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனக் கூறி நாளை மறுநாள் முதல் மீண்டும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர் மருத்துவர்கள்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிரம் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர்.
கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினர். மூன்று வாரங்களை கடந்து போராட்டம் தொடர்ந்த, நிலையில் அரசு மருத்துவமனைகளை மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தா மற்றும் மேற்குவங்கத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவைகள் பாதிப்படைந்ததால் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. மேலும் மருத்துவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் சிபிஐ விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி மீண்டும் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரித்திருக்கின்றனர் மருத்துவர்கள். சிபிஐ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் சஞ்சய் ராயின் பெயர் மட்டுமே உள்ளதாகவும், ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரி முதல்வரின் தொடர்பு உள்ளிட்ட எதுவும் அதில் இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக நாளை மறுநாள் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தத்தில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர் மருத்துவர்கள். இதனால் கொல்கத்தாவில் மீண்டும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications