3 லட்சம் வாங்கிவிட்டு.. ரத்த மாதிரியை குப்பை தொட்டியில் வீசிய டாக்டர்கள்.. புனே கார் விபத்தில் பகீர்
புனே: புனே போர்ஷே விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே இரண்டு டாக்டர்கள் மற்றும் பியூன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே 19ஆம் தேதி கொடூர விபத்து ஒன்று அரங்கேறியது. அன்று அதிகாலை புனேயில் 17 வயது சிறுவன் மதுபோதையில் தனது போர்ஷே கார் ஓட்டியுள்ளான்.

மணிக்கு 200 கிமீ வேகத்தில் சென்ற அந்த கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பைக்கில் சென்ற அந்த இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்,
விபத்து: அவன் புனேவை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே சிறுவனைக் காப்பாற்ற திரைத்துறையை மிஞ்சும் அளவுக்குப் பல சம்பவங்கள் திரை மறைவில் நடந்து வருகிறது.
அதன்படி சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் பியூன் என மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்ற இவர்களுக்கு ₹ 3 லட்சம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
என்ன நடந்தது: இதில் பியூனாக இருந்த அதுல் கட்காம்ப்ளே இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார். அவர் தான், அந்த சிறுவனின் குடும்பத்திடமிருந்து இரண்டு மருத்துவர்களுக்காக 3 லட்ச ரூபாயை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார். இந்த விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர் அஜய் தவாடே மற்றும் டாக்டர் ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மருத்துவர் வாக்குமூலம்: விசாரணையில் டாக்டர் தவாடே கூறிய தகவல்கள் பகீர் கிளப்புவதாக இருந்துள்ளது. அதாவது விபத்து நடந்த நாளில் குற்றவாளியின் தந்தை டாக்டருக்கு போன் செய்துள்ளார். சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றினால் அதற்குப் பதிலாகப் பணம் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் ரத்த மாதிரியைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக டாக்டரின் ரத்த மாதிரியை வைத்துள்ளனர்.
சிறுவன் விபத்தை ஏற்படுத்திய போது மது குடித்து இருந்ததை மறைக்கவே இப்படிச் செய்துள்ளனர். இப்போது டாக்டர் தவாடே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாகக் கூறியிருக்கிறார்.
டாக்டர் தகவல்: மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் அந்த சிறுவனின் ரத்த மாதிரிகளே இல்லை என்று புனே கமிஷ்னர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மே 19 காலை 11 மணியளவில், சசூன் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிறுவனின் ரத்த மாதிரியைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வேறு ஒருவரின் ரத்த மாதிரியை வைத்துள்ளனர்.
அதை இவர்கள் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். அஜய் தவாடேயின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீஹரி ஹல்னர் என்பவர் ரத்த மாதிரிகளை மாற்றியது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்துள்ளோம்" என்றார்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரிகள் மாற்றப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை கிடைத்த மருத்துவ ரிப்போர்ட்டில் சிறுவனின் ரத்தத்தில் மது இருந்ததற்கான தடயங்கள் எதுவுமே இல்லை. இருப்பினும், விபத்து நடந்த நாளன்று எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் அவர் நண்பர்களுடன் மது அருந்துவது உறுதியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications