Punjab flood: பஞ்சாப் வெள்ளம்.. கதறும் மக்கள்.. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பகவந்த் மான்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுதார்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், குர்தாஸ்பூர், ஃபசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 1,300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 6,582 பேர் 122 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வெள்ளம் காரணமாக அமிர்தசரஸின் அஜ்னாலா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் மூலம் பால் பவுடர் மற்றும் உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சீன பயணத்தை முடித்துவிட்டு திங்கட்கிழமை மாலை டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். இதற்கிடையே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ. 60,000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு பகவந்த் மான் கடிதம் எழுதியுள்ளார்.
CM Bhagwant Mann gets emotional while meeting the flood affected people today in Ferozepur.#PunjabFloods pic.twitter.com/rgWYZdiY1w
— Akashdeep Thind (@thind_akashdeep) September 2, 2025
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டி ராஜோ கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணி ஒருவர் தனது துயரத்தைப் பகிர்ந்து கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தப் பெண்மணியின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் பகவந்த் மான். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications