காங்கிரஸ் துணை தலைவர் பணிகளில் இருந்து ராகுலுக்கு ஒரு மாதம் லீவ்: "ஹெச்.எம்.: சோனியா அனுமதி!
டெல்லி: பள்ளிக்கூடங்களில் விடுப்பு கேட்பதைப் போல காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தமது வழக்கமான கட்சி பணிகளில் இருந்து 4 வார காலம் விடுப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதனை பள்ளித் தலைமையாசிரியர் போல ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற சில மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு சம்மட்டி அடியாக அமைந்தது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகள் அக்கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே வழக்கமான கட்சி பணிகளில் இருந்து 4 வார விடுப்பு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் துணை தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. சோனியாவும் இதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, ராகுல் காந்தி ஒரு மாத காலத்துக்கு கட்சி பணிகளில் பங்கேற்காமல், தனிப்பட்ட முறையில் ஓய்வு எடுப்பார் என கருதப்படுகிறது.
அதுவரை, அவரது பணிகளை சோனியா காந்தியே கூடுதல் பொறுப்பாக கவனித்துக்கொள்வார். இந்த விடுமுறை முடிந்த பின்னர் ராகுல் காந்தி மீண்டும் தனது பணிகளை தொடர்வார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications