நான் வருவேன்.. மணிப்பூருக்கு 3வது முறையாக சென்ற ராகுல் காந்தி.. பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
இம்பால்: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்து உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது வரை அங்கு இயல்பு நிலை திரும்பாமல் உள்ளது. பல இடங்களில் பதற்றம் குறையவில்லை.

மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்லவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். சுராசந்த்பூர் அடுத்த மந்தப் மற்றும் துய்பாங் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்துப் பேசினார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் உரையாடி, அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. தொடர்ந்து, மணிப்பூர் மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசும் ராகுல் காந்தி, மணிப்பூர் மாநில ஆளுநர் அனுஷ்யா உய்கேவை சந்தித்துப் பேச உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு முறை மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications