Rahul Gandhi vs EC: ராகுல் காந்தி ஆதாரத்துடன் நேரில் வரணும்.. கடிதம் எழுதிய தலைமை தேர்தல் அதிகாரி!
பெங்களூர்: தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முனணி தலைவருமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மகாதேவபுரா தொகுதியில் தேர்தல் மோசடி நடந்துள்ளது. "1,00,250 வாக்குகள் திருடப்பட்டன, 12,000 போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுகிறது," என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் விமர்சித்தார்.
தேர்தல் அதிகாரி கடிதம்
இதையடுத்து, கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் நாளை (ஆகஸ்ட் 8, 2025) அன்று தன்னை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டுள்ளார்.
ராகுல் காந்திக்கு எச்சரிக்கை
அப்படி சந்திக்கவில்லை என்றால் வாக்காளர் பதிவு விதிகள் 2020, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா 2023 ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்குவதாகவும், தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை குறைப்பதாகவும் தேர்தல் அதிகாரி கவலை தெரிவித்தார்.
காங்கிரஸ் பதில்
மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அலுவலகமும் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி உள்ளது. தேவையான விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக, 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b) இன் கீழ், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பெயர்களுடன் கையொப்பமிடப்பட்ட பிரகடனம் மற்றும் உறுதிமொழியை வழங்க வேண்டும்" என்று கோரியுள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி, "தேர்தல் ஆணையத்தின் மறுப்பு, மோசடியை மறைக்கும் முயற்சி. நாங்கள் ஆதாரங்களை சமர்ப்பிப்போம்," என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நான் இதை அனைவருக்கும் பகிரங்கமாகச் சொல்கிறேன். இதை ஒரு சத்தியப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அவர்களின் தரவு, நாங்கள் அவர்களின் தரவைக் காட்சிப்படுத்துகிறோம். இது எங்கள் தரவு அல்ல" என்றார்.












Click it and Unblock the Notifications