அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமித்ஷா.. பிரசார வாகனத்தில் உரசிய மின்வயரால் ஷாக்.. தீவிர விசாரணை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த தேர்தல் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணை தொடங்கி உள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். தற்போதைய சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏறும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தேர்தல் வெற்றி என்பது 2 கட்சிகளுக்கும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு தற்போது காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் நேற்று ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் நின்றபடி ஊர்வலம் சென்றார். குச்சமன், மக்ரானா, நாகவுர் உள்ளிட்ட பகுதிகளில் அமித்ஷா பிரசாரம் செய்தார். பாஜகவினர் ரதம் என கூறும் தேர்தல் பிரசார வாகனத்தில் நின்றபடி அமித்ஷா ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வேளையில் அமித்ஷாவின் பிரசார வாகனம் பிடியாத் கிராமத்தில் இருந்து பர்பத்சர் எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று பிரசார வாகனம் மேல்பகுதியில் சென்ற மின்வயரில் உரசியது. இதனால் தீப்பொறி எழுந்து மின்கம்பி அறுந்து விழுந்தது. இதையடுத்து அமித்ஷா உள்பட அந்த வாகனத்தில் இருந்த அனைவரும் வேகமாக கீழே இறங்கினர்.
இதனால் அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. அமித்ஷா உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து அமித்ஷா வேறு பிரசார வாகனத்தில் ஏறி ஓட்டு சேகரிப்பை தொடங்கினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக தலைவர்கள் பிரசார வாகனத்தில் செல்லும்போது அந்த பகுதியில் உள்ள மின்வயர்கள் வாகனங்கள் மீது உரசாமல் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்படும்.

அதன்பிறகே தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் பிரசாரம் செய்வார். ஆனால் அமித்ஷாவின் பிரசார வாகனத்தில் மின்வயர் உரசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் அஜ்மீர் மண்டல கமிஷர் மூலம் விசாரணை உள்துறை அமைச்சகமும் விசாரணையை தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications