கூட இருந்தே "குழி பறித்த" கூட்டணி.. 1% வாக்குகளை கூட இழக்கல.. ஆனால், ராஜஸ்தானை பறி கொடுத்த காங்கிரஸ்
ஜெய்பூர்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அங்கு காங்கிரஸ் பெற்று இருக்கும் வாக்கு சதவீதம் என்ன? வாக்குகள் பிரிந்ததால் பாஜக வென்றதா? என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகாலம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவடைவதை அடுத்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 75.45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் பாஜக பெரும்பான்மை பலத்துடன் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கட்சி முந்தைய தேர்தலை காட்டிலும் கூடுதலாக 43 இடங்களில் வெற்றிபெற்று மொத்தம் 116 இடங்களுடன் பெரும்பான்மை பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி 2018 தேர்தலில் வென்ற 31 தொகுதிகளை இழந்து 69 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று இருக்கிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலைவிட 4 தொகுதிகளை இழந்து 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதர கட்சிகள் 12 தொகுதிகளில் வெற்றிபெற்று உள்ளன. இதுவும் கடந்த தேர்தலைவிட 8 தொகுதிகள் குறைவாகும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 31 தொகுதிகளை இழந்து ஆட்சியை இழந்தாலும், அக்கட்சி ராஜஸ்தானில் பெற்ற வாக்கு சதவீதம் ஒரு சதவீதம் கூட சரியவில்லை. 0.03 சதவீத மட்டுமே அக்கட்சி சந்தித்து உள்ளது. அக்கட்சி 39.6 சதவீத வாக்குகளை இந்த தேர்தலில் பெற்று உள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் 3.54 சதவீதம் அதிகரித்து 42.4 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் விகிதம் 2.01 சதவீதம் குறைந்து 2.0% பெற்று உள்ளது. இதர கட்சிகள் 16 சதவீத வாக்குகளை பெற்று உள்ளன.
பகுஜன் சமாஜ் மற்றும் இதர கட்சிகள் பெற்று வாக்குகள்தான் இந்த ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக அமைந்து உள்ளன. இந்த இதர கட்சிகளில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்று இருந்த ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சமாஜ்வாடி கட்சியும் அடங்கும். அதேபோல் பட்டியலின, பழங்குடி வாக்குகளை பகுஜன் சமாஜ், ஆசாத் சமாஜ் கட்சி, பழங்குடியினர் கட்சி பிரித்ததால் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று உள்ளது.












Click it and Unblock the Notifications