‘இந்தியா’ கூட்டணியின் தேவை.. காங்கிரஸுக்கு ராஜஸ்தான் கற்றுத்தந்த பாடம்! 2024 தேர்தலில் என்னவாகும்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் தேவை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாடம் கற்பித்து உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் மூத்த தலைவரான அசோக் கெலாட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவரது ஆட்சிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடையும் நிலையில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸும், பாஜகவும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டன.

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து நவம்பர் 25 ஆம் தேதி 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 75.45 சதவீத வாக்குகள் பதிவாகின. டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கையில் ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு பெரிய பாடமாக அமைந்து உள்ளது.
இதற்கு காரணம் ராஜஸ்தானில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு உள்ளன. குறிப்பாக அங்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சி காங்கிரஸ்டன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி தனியாக 184 தொகுதிகளில் போட்டியிட்டது. ராஜஸ்தானின் மூன்றாவது பெரிய கட்சியாக கூறப்படும் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி 78 இடங்களிலும், அதன் கூட்டணியான ஆசாத் சமாஜ் கட்சி 46 இடங்களிலும், ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி 10 இடங்களிலும், பழங்குடியினர் கட்சி 17 இடங்களிலும், லோக் ஜனசக்தி 9 இடங்களிலும் போட்டியிட்டன.
இவை அல்லாமல் இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளை எடுத்துக்கொண்டால் ஆம் ஆத்மி கட்சி 85 இடங்களில் போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து 17 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு 9 இடங்களில் போட்டிபோட்டது. இது அல்லாமல் அந்த கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியும் 5 இடங்களிலும் போட்டியிட்டன. இப்படி இந்தியா கூட்டணியின் வாக்குகள் பல வகைகளில் சிதறிய காரணத்தாலும், பட்டியலின, பழங்குடி வாக்குகளை பகுஜன் சமாஜ், ஆசாத் சமாஜ் கட்சி, பழங்குடியினர் கட்சி பிரித்ததே பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications