"விலைக்கு" வந்த மனைவி.. பைக்கில் "கட்டி" கிராமத்தை வலம்வந்த கணவன்..வீடியோ எடுத்தவரையும் விடாத போலீஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம், அம்மாநில மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை தந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ளது நஹர்சிங்புரா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பிரேம் ராம் மேக்வால் .. இவருக்கு 40 வயதாகிறது.. எந்நேரமும் குடித்து கொண்டே இருப்பாராம்..

தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியை அடித்து தாக்குவாராம்.. தினம் தினம் குடித்துவிட்டு ரகளை செய்யும் கணவனை சமாளிக்க முடியாமல், ஒவ்வொரு நாளும் அந்த பெண் நடுங்கி போய்விடுவாராம்.
அனுமதி கிடைக்கவில்லை: இந்த பெண்ணின் தங்கையின் வீடு ஜெய்சால்மரில் உள்ளது.. எனவே, தன்னுடைய தங்கையை சந்திக்க ஆசைப்பட்டு, கணவர் பிரேம் ராமிடம் ஜெய்சால்மர் செல்ல அனுமதி கேட்டிருக்கிறார்.. ஆனால், சொந்த தங்கையைகூட பார்க்கக்கூடாது என்று பிரேம் ராம் கறாராக மனைவியிடம் சொல்லிவிட்டாராம். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, தங்கையை சந்தித்துவிட்டு உடனே வந்துவிடுவதாக சொல்லியிருக்கிறார். இதற்கும் பிரேம் ராம் அனுமதி தரவில்லை..
பின்னர் தம்பதிக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இத்தனை நாளும் எதிர்த்து பேசாமல், இன்று திடீரென தன்னிடம் மனைவி வாக்குவாதம் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ராம்.
தண்டனை: எனவே, இதற்காக தன்னுடைய மனைவிக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தார். மனைவியின் கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி, இன்னொரு முனையை தன்னுடைய பைக்கின் பின்பகுதியில் சேர்த்து கட்டிவிட்டார்.. பிறகு பைக்கை ஓட்ட ஆரம்பித்தார்.. அப்போது வண்டியின் பின்னால் கயிற்றில் கட்டப்பட்டிருந்த பெண்ணும், ரோடெல்லாம் தரதரவென இழுத்து வரப்பட்டாராம்..
இப்படியே அவரின் கிராமத்தையே, பைக்கில் கட்டப்பட்ட தனது மனைவியுடன் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
கதறல் வீடியோ: அந்த வீடியோவில் பிரேமின் மனைவி கதறி கதறி அழுகிறார்.. "யாராவது என்னை காப்பாத்துங்க" என்று ரோட்டில் உள்ள எல்லாரிடமும் உதவி கேட்டுக் கொண்டே அழுகிறார். ஆனால், யாருமே உதவிக்கு வரவில்லை. இந்த வீடியோவை எடுத்தவரும் உதவவில்லை.
பைக்கில் மனைவியை கட்டி இழுத்து கொண்டு போகும்போது, பிரேம் மூக்குமுட்ட குடித்திருந்ததாக தெரிகிறது. தற்சமயம், பாதிக்கப்பட்ட மனைவி, ஜெய்சால்மரில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் குடிகார பிரேமை கைது செய்துள்ளனர்.. அத்துடன், மனைவியை வரவழைத்து அவரிடம் புகார் பெறவும் முடிவு செய்துள்ளனர..

ஹைலைட்: அதுமட்டுமல்ல, அந்த பெண் அவ்வளவு கதறியும் உதவி செய்யாமல், வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்த நபர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசார் தயாராகி வருகிறார்களாம்..
இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ராஜஸ்தானில் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், 10 மாதத்துக்கு முன்புதான், பிரேம் அவரது மனைவியை 2 லட்ச ரூபாய் விலை கொடுத்து வாங்கிவந்தாராம்.. ராஜஸ்தானின் சில பகுதிகளில் இதுபோன்ற பழக்கம் இன்னமும் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பே நடந்திருக்கிறது.. ஆனால், யாருமே இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை... இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீசாரே முன்வந்து இந்த வழக்கை விசாரித்துள்ளனர்.. பெண்ணின் கணவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
தான் மறுத்தாலும், தனது சகோதரியை பார்க்க மனைவி விரும்பியதாலேயே, இவ்வாறு கைகளை பைக்கில் கட்டி இழுத்து சென்றதாக போலீசில் சொல்லி உள்ளார் கணவர். இனிமேல்தான் பாதிக்கப்பட்ட மனைவி புகார் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சொல்லும்போது, " பிரேம் ராம் எந்த வேலைக்கும் போவதில்லை.. கிராமத்தில் தன்னுடைய அம்மாவுடனேயே வசிக்கிறார்.. கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அந்த பெண்ணை விலைக்கு வாங்கி வந்து, திருமணம் செய்துள்ளார்.. திருமணம் ஆனதிலிருந்தே தகராறு செய்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால், மனைவியை அடிக்கடி தாக்கியதாகவும் அவரது அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். இனியும் தொடர் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications