உண்மை தானாக வெளியே வரும்.. உடனே ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுங்கள்.. மௌனம் கலைத்த ராகுல் காந்தி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உடனே ஆளுநர் சட்டசபையை கூட்ட வேண்டும், அப்போதுதான் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிய வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. ராஜஸ்தானில் இன்னும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையிலான மோதல் முடிவிற்கு வரவில்லை. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்காத நிலையில், ராஜஸ்தானில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

அங்கு சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வருகிறார்.இதற்காக அவர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிற்கு ஏற்கனவே கடிதம் எழுதிவிட்டார். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுதிய கடிதத்தில் இன்னும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முடிவு எடுக்கவில்லை.
அதோடு நேற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முதல்வர் அசோக் கெலாட் உடன் சந்திப்பு நடத்தினார். அதிலும் சட்டசபையை கூட்ட அவர் உறுதி அளிக்கவில்லை. சட்டசபை கூட்டுவதற்கான காரணத்தை முதல்வர் தெரிவிக்கவில்லை. ஏன் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அவர் கூறவில்லை. அதனால் அதில் முடிவு எடுக்க முடியாது. விரைவில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன், என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் பிரச்சனையில் காங்கிரஸ் எம்பி மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது மௌனம் கலைத்து இருக்கிறார். அதில், இந்த நாடு சட்டத்தின் படியும் அரசியலமைப்பின் படியும் நடத்தப்படுகிறது. ஒரு அரசு என்பது மக்களின் வாக்குகளை பொறுத்தே உருவாக்கப்படுகிறது.
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக கடுமையாக முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. ராஜஸ்தானின் 8 கோடி மக்களுக்கு இது மிகப்பெரிய அவமானம், அவமரியாதை . கவர்னர் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications