மக்களை சந்தித்த "மன்னர்" குடும்ப வாரிசுகள்.. ஜனநாயக பரீட்சையில் பாஸ் ஆனது யார்? இதிலும் காங். பாவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தலில் அரசு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் போட்டியிட்ட நிலையில், அவர்களில் வென்றவர்கள் யார் தோல்வியடைந்தவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சுதந்திரத்திற்குப் பிறகு அரச குடும்பங்கள் தங்கள் அதிகாரம் மற்றும் பட்டங்களை இழந்தாலும் உள்ளூர் மக்களிடையே அவர்கள் தொடர்ந்து பிரபலமாகவே இருந்து வருகின்றனர்.

மேலும், வாக்கு வங்கி அரசியலிலும் அவர்களின் தாக்கம் இருக்கவே செய்கிறது. அதிலும் உயர் சாதியினர், குறிப்பாகப் பிராமணர்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் மத்தியில் அரசு குடும்பத்தினரின் செல்வாக்கு இன்னும் வலுவாக இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே அரச குடும்பங்களைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் மக்களைச் சந்தித்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள், அதில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர், அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த விஸ்வேந்திர சிங் தேர்தலில் தோல்வியடைந்தார். இத குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலம் வித்யாதர் நகர் தொகுதியில் முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் இளவரசி தியா குமாரி பாஜக சார்பில் போட்டியிட்டார். அவர் சுமார் 71,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராஜஸ்தான் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இவர் தான். ஜனநாயக திருவிழாவில் தன்னை வெற்றி பெற்ற வைத்தற்கு நன்றி தெரிவித்த அவர், எந்த சூழலிலும் பொதுமக்கள் உடன் துணை நிற்பேன் என்றார்.
முன்னாள் முதல்வர்: ராஜஸ்தானின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே ஜால்ராபட்டன் தொகுதியில் 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிந்தியா அரச குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜேவுக்கு பாஜகவுக்குள் நெருக்கடி இருக்கிறது. அவருக்கு முதல்வர் பதவி மீண்டும் போகக் கூடாது எனக் கட்சிக்குள்ளே நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில், அதையும் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 6ஆவது முறையாகச் சட்டசபைக்குத் தேர்வாகியுள்ளார்.
பிகானர் அரச குடும்பத்தின் இளவரசி சித்தி குமாரி பிகானேர் கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், அவரும் அவரும் 19,303 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் யஷ்பால் கெலாட்டை தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாமே வெற்றி: அதேபோல கோட்டாவின் லட்புரா தொகுதியில், மகாராவ் இஜ்யா ராஜ் சிங்கின் மனைவி கல்பனா தேவி போட்டியிட்டார் அவர் 25,522 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேவி 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நத்த்வாரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் விஸ்வராஜ் சிங் மேவார் முதல் முறையாகப் போட்டியிட்டார். அவர் 7,504 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வாக்கு வித்தியாசம் குறைவு என்பது போல தோன்றினாலும் கூட அவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் சபாநாயகருமான சிபி ஜோஷியை எதிர்த்துப் போட்டியிட்டார். மேலும், சிபி ஜோஷி தொடர்ந்து அங்கு 5 முறை வென்றிருந்தார். அவரை தான் விஸ்வராஜ் சிங் வீழ்த்தியுள்ளார்.
காங்கிரஸ் ரொம்பவே பாவம்: பாஜக சார்பில் களமிறங்கிய இந்த 5 பேரும் வெற்றி பெற்றனர். அதேநேரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒரே அரச வேட்பாளரும், பரத்பூர் அரச குடும்பத்தின் கடைசி வாரிசுமான பிரிஜேந்திர சிங்கின் மகன் விஸ்வேந்திர சிங், 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் டீக்-கும்ஹர் தொகுதியில் தோல்வியடைந்தார்.












Click it and Unblock the Notifications