'கோல்ப் ஸ்டிக்'கால் சிக்கிக் கொண்ட ராஜேஷ் தல்வார்!

ஆரம்பத்திலி்ருந்தே சிபிஐக்கு இந்த கோல்ப் மட்டைதான் இடித்து வந்தது. கடைசியில் அந்த கருத்து சரிதான் என்பதை சிபிஐ நிரூபித்துள்ளது.
அதேசமயம், இந்த கோல்ப் மட்டையை மறைத்து வைக்க முயன்ற தல்வார், தற்போது ஆயுள் தண்டனை தவிர, கூடுதலாக ஆதாரத்தை அழிக்க முயன்ற குற்றத்திற்காக கூடுதல் தண்டனையையும் பெற்றுள்ளார்.
ஆருஷி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியபோது, கோல்ப் மட்டை குறித்த சந்தேகத்தை அதன் விசாரணை அதிகாரி கெளல் எழுப்பினார். கோல்ப் மட்டை மூலம் இருவரும் தாக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது அவரது சந்தேகம். மேலும் நோய்டா கோல்ப் கிளப்பில் ராஜேஷ் தல்வார் உறுப்பினராகவும் இருந்தார்.
ஆனால் இதுதொடர்பான ஆதாரம் சிபிஐக்கு ஆரம்பத்தில் தெளிவாக கிடைக்கவில்லை. காரணம், தல்வார் வீட்டில் கோல்ப் மட்டை கிடைக்கவில்லை. இதையடுத்து குஜராத் தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் மொஹீந்தர் சிங் தாஹியாவின் உதவியை நாடியது சிபிஐ.
அவர் சம்பந்தப்பட்ட வீட்டில் மிகவும் நுணுக்கமாக ஆய்வு மேற்கொண்டார். சிபிஐ கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் பரிசோதித்துப் பார்த்தார். அதில், ஆருஷியின் நெற்றியில் வி வடிவிலான காயம் ஏற்பட்டிருப்பதை அவர் உற்று ஆய்வு செய்ததில், அந்தக் காயம், கோல்ப் மட்டையால் மட்டுமே உண்டாகியிருக்க முடியும் என்று அடித்துக் கூறி விட்டார்.
இதேபோல, பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் சுனில் டோஹ்ரே, நரேஷ் ராஜ் ஆகியோரும் கோல்ப் மட்டையால் தாக்கியதால் மரணம் சம்பவித்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து தல்வார் தனது கோல்ப் மட்டைகளை விசாரணைக்காக கொடுக்க வேண்டும் என்று அவரை அணுகியது சிபிஐ. ஆனால் மிகவும் தாமதமாகத்தான் இந்த கோல்ப் மட்டைகளைக் கொடுத்தார் தல்வார். அதில் இரண்டு கோல்ப் மட்டைகள் மட்டும் மற்ற மட்டைகளை விட படு சுத்தமாக இருந்தன. மேலும் ஒரு கோல்ப் மட்டையை கொலை நடந்த தினத்தன்று தனது வீட்டு லாப்ட்டில் தூக்கிப் போட்டுள்ளார் தல்வார். இது பின்னர் கைப்பற்றப்பட்டு கோ்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
கிடைத்த கோல்ப் மட்டைகளை சிபிஐ தீவிரமாக ஆய்வுக்குட்படுத்தியது. ஆனால் கோல்ப் மட்டைகளைக் கையில் வாங்கி விட்டபோதிலும், அதுதான் கொலைக்கான முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்க சிபிஐ மிகக் கடுமையாகவே போராட வேண்டியதாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் முதலில் தோன்றிய சந்தேகத்தை விட்டு விடாமல் சிபிஐ தொடர்ந்து உறுதியுடன் இருந்து அதை உண்மை என்றும் நிரூபித்து தல்வாருக்கும், அவரது மனைவிக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications