ஸ்ரீநகர் பேரணியில் பறந்த பாக். கொடிகள்! காஷ்மீர் அரசு மீது மத்திய அரசு கடும் அதிருப்தி!!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பேரணியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி அந்நாட்டு கொடிகள் பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் கிலானி, மஸ்ரத் ஆலம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் கிலானி பேரணிக்கு அனுமதி அளித்த ஜம்மு காஷ்மீர அரசு மீது மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையத் அலி ஷா கிலானி டெல்லியில் இருந்து நேற்று ஸ்ரீநகர் திரும்பினார். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, ஹைதர்போராவில் உள்ள அவரது வீடு வரை ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
காஷ்மீர் சிறையில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டு மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவரான மஸ்ரத் ஆலம், இந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள், தங்கள் கைகளில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி, அந்த நாட்டுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
அப்போது பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள். பிரிவினைவாதிகளின் இந்த நடவடிக்கை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய மஸ்ரத் ஆலம், காஷ்மீர் மக்களின் விருப்பங்களை மட்டுமே பேரணியில் வெளிப்படுத்துவதாக கூறினார்.
இந்த பேரணியில் கிலானி பேசுகையில், காஷ்மீர் தொடர்பான சிம்லா உடன்படிக்கை மற்றும் லாகூர் அறிக்கையை ஏற்கமாட்டோம் என்றார். காஷ்மீரில் கிலானியின் பேரணிக்கு 5 ஆண்டுகளுக்குப்பின் மாநில அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்ரத் ஆலம் கொடும்பாவி எரிப்பு
இதனிடையே ஜம்முவில் சிவசேனா மற்றும் டோக்ரா முன்னணியினர் மஸ்ரத் ஆலம் கொடும்பாவியை எரித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்ரத் ஆலமை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கிலானி, மஸ்ரத் ஆலம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு அதிருப்தி
இதனிடையே இப் பேரணிக்கு அனுமதி அளித்த மாநில அரசு மீது பாரதிய ஜனதா கட்சி அதிருப்தி தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறுகையில், மாநிலத்தில் சட்ட விரோதமாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத்திடம் பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் பாகிஸ்தான் நாட்டின் கொடி அசைக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில அரசை ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
இச்சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பெரும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டபோது, அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மாநில அரசு சார்பில் நியாயப்படுத்தப்பட்டது.
தற்போது இந்தியாவை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மஸ்ரத் ஆலம் கொடும்பாவி எரிப்பு
இதனிடையே ஜம்முவில் சிவசேனா மற்றும் டோக்ரா முன்னணியினர் மஸ்ரத் ஆலம் கொடும்பாவியை எரித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்ரத் ஆலமை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.













Click it and Unblock the Notifications