கண்கள் திறந்ததுமே.. அயோத்தி ராமர் சிலை முன் காட்டப்பட்ட கண்ணாடி! ஏன்? காரணம் இதுதான்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கோவில் கருவறையில் நடந்த பிரான் பிரதிஷ்டைக்கு பிறகு 5 வயது பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டவுடன் கண்ணாடி காண்பிக்கப்பட்டது. மேலும் மையும் சிலை மீது வைக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை என்பது கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறைக்கு சென்று அர்ச்சகர்களுடன் பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். அவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்பட அர்ச்சகர்கள் இருந்தனர். அர்ச்சகர்கள் வழிக்காட்டுதல் படி பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை செய்தார்.
இதையடுத்து அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமரின் கண்கள் திறக்கப்பட்டன. சாந்தமான சிரிப்புடன் பால ராமர் சிலை பக்தர்களை பரவசப்படுத்தியது. அதன்பிறகு பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் பால ராமருக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில் தான் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கோவில் கருவறையில் பால ராமர் சிலையின் கண்கள் திறந்தவுடன் அவரது முகத்துக்கு எதிரே கண்ணாடி காட்டப்பட்டதோடு, கண்களில் மை வைக்கப்பட்ட தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவலும் கிடைத்துள்ளது.
அதாவது கோவில் கருவறையில் சாமி சிலைகள் நிறுவப்பட்டால் அதனை திருச்சிலை என்பார்கள். பிரான பிரதிஷ்டை கும்பாபிஷேகத்துக்கு பிறகு தான் அந்த திருச்சிலையானது தெய்வ திருமேனி கொண்டதாக மாறும் என்பது ஐதீகம். இப்படி தெய்வ திருமேனியில் தான் பக்தர்களுக்கு அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அதோடு, கும்பாபிஷேகத்தின்போது கூறப்படும் மந்திரங்கள் என்பது சிலைகளுக்கு அருளுடன் கூடிய சக்தியை அளிக்கும். இப்படி அருளுடன் கூடிய சக்தியானது சிலையின் கண்கள் திறக்கப்படும்போது வெளிப்படும். இவ்வாறு வெளிப்படும் சக்தி மீண்டும் அந்த தெய்வத்திருமேனியிடமே செல்ல வேண்டும் என்பது மரபு.
இதனால் தான் சிலை திறக்கப்பட்டவுடன் பால ராமர் சிலை முன்பு கண்ணாடி காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் தெய்திருமேனி கொண்ட பால ராமருக்கே தெய்வீக சக்தி சென்றுள்ள நிலையில் அது அவரை வழிபடும் பக்தர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதேபோல் திருஷ்டி கழிப்பதற்காக கண்களில் மையம் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications