திருப்பதி வன அதிகாரிகள் கொலை: 400 தமிழக தொழிலாளர்கள் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சல வனப்பகுதி கடப்பா மாவட்டத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் பீலேர் வரை பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு சந்தனமரம், செம்மரம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் பணத்தை அள்ளித்தரும் சந்தனம் மற்றும் செம்மரங்களை கடத்தல்காரர்கள் அடிக்கடி வெட்டி கடத்தி வருகின்றனர். இதை தடுக்க ஆந்திர வனத்துறை மற்றும் போலீசார் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி கோயில் அருகே உள்ள பார்வேட்டை மண்டபம் சோதனை சாவடியில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கஞ்சி பண்டா வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருமலை உதவி வனச்சரகர் ஸ்ரீதருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஸ்ரீதர் மற்றும் 9 வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்கு ஞாயிறன்று அதிகாலை விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 பேர், செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக அடுக்கிக்கொண்டிருந்தனர்.
செம்மரக்கடத்தல்
வனத்துறை அதிகாரிகளை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச்சென்ற வனத்துறை ஊழியர்கள், அவர்களில் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். வனத்துறையினரிடம் பிடிபட்டவர்கள், ‘எங்களுடன் வந்த மற்றவர்கள் மறைந்துள்ள இடம் தெரியும், அவர்களை காட்டுகிறோம்' என கூறி அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த மேலும் 30க்கும் மேற்பட்டோர், வனச்சரகர் ஸ்ரீதர் மற்றும் வனத்துறையினர் மீது உருட்டுக்கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தப்பி ஓடி புதர் மறைவில் மறைந்துகொண்டனர். பின்னர், செல்போனில் திருப்பதி வனத்துறை அதிகாரி ரமணா நாயக்கிற்கு தகவல் தெரிவித்தனர்.
திடீர் தாக்குதல்
வனத்துறை உதவி கண்காணிப்பாளர் டேவிட் கர்ணாகர், ஊழியர்கள் கார் மற்றும் ஜீப்பில் விரைந்தனர். அவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து சென்று வனத்துறை ஊழியர்களை தேடினர்.
அப்போது வனச்சரகர் ஸ்ரீதர் வந்த ஜீப் மட்டும் தனியாக நிற்பதை கண்டு அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் புதர் மறைவில் இருந்து ஸ்ரீதர் மற்றும் ஊழியர்கள் வெளியே வந்து நடந்த சம்பவங்களை கூறிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனத்துறையினரை 100க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கத்தொடங்கினர்.
அடித்துக் கொலை
ஊழியர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். ஸ்ரீதர், டேவிட் கர்ணாகர் ஆகியோர் தப்பமுடியாமல் கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொண்டனர். கடத்தல்காரர்கள் டேவிட் கர்ணாகரை கல்லால் சரமாரி தாக்கினர். படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் இறந்தார்.
பின்னர் வனச்சரகர் ஸ்ரீதரை கடத்தல்காரர்கள் விரட்டிச்சென்று கம்பு மற்றும் கற்கலால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இதை தடுக்க முயன்ற வனத்துறை ஊழியர்கள் ரமணா, ரமேஷ் உட்பட 4 பேரை தாக்கி விட்டு கடத்தல்காரர்கள் தப்பி சென்றுவிட்டனர். மேலும், வனத்துறை அதிகாரிகளின் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் சீனிவாசலு, திருப்பதி எஸ்பி ராஜசேகரபாபு, ஏஎஸ்பி உமாமகேஷ்வர சர்மா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். சடலங்களை மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஊழியர்களை மீட்டு சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொதுமக்கள் அஞ்சலி
செம்மரக்கடத்தல் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரிகளின் உடல் பிரேத பரிசோதனை திருப்பதி அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை நடைபெற்றது. பின்னர் அவர்களின் உடல்கள் அங்கிருந்து முக்கிய சாலைகள் வழியாக திருப்பதி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் வனத்துறை அதிகாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
முதல்வர் கிரண்குமார் உத்தரவு
இதனிடையே கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட செம்மரக்கடத்தல் கும்பலைப் பிடிக்க ஆந்திர முதல்வர் கிரண்குமார் உத்தவிட்டதைத் தொடர்ந்து போலீசார் திங்கட்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விடியவிடிய தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. இதனைத் தொடர்ந்து கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூரு, சந்திரகிரி, பாகரா ஆகிய இடங்களில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக்கொண்டிருந்த 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
அதேபோல நெல்லூர் மாவட்டம் ரயில்வே கோடூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை - கன்னியாகுமரி ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தப்ப முயன்ற 67 நபர்கள் உட்பட 422 கூலித் தொழிலாளர்கள் ஓரே நாளில் கைது செய்யப்பட்டனர். இவர்களை திருப்பதிக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
சுட உத்தரவு
இது தொடர்பாக செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் உதயகுமார் கூறியதாவது;
அதிகாரிகள் 2 பேர் கொலையான சம்பவத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். இவர்களில் பலர் சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். ரயில் மூலம் தமிழகத்திற்கு தப்பிக்க முயன்றபோது இவர்கள் பிடிபட்டுள்ளனர். வரும் 31ம் தேதிக்குள் கடத்தல் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வனப்பகுதிக்குள் ரோந்து செல்லும் அனைத்து வனக்காப்பாளர்களுக்கும் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்மரக்கடத்தல் கும்பலை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications