சீட்டுக்கட்டாக சரிந்த ரயில் பெட்டிகள்.. 4 பேர் உயிர் பறித்த பீகார் விபத்து! 2வது நாளாக மீட்புப் பணி
பாட்னா: பீகாரின் பக்சார் பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் 2 வது நாளாக தொடர்ந்து வருகிறது.
அசாம் மாநிலம் காமாக்யா நோக்கிச் செல்லும் வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. பீகார் வழியாக சென்று கொண்டு இருந்த இந்த ரயில், பக்சாரை அடுத்த ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 9.35 மணியளவில் தடம் புரண்டது பெரும் விபத்து ஏற்பட்டது. தொடக்கத்தில் 6 பெட்டிகள் தடம் புரண்டதாகவே செய்திகள் வெளியாகின.

ஆனால், 21 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி பெரும் விபத்து ஏற்பட்டதாக அதிர்சித் தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயம் அடைந்த பயணிகளை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தொடக்கத்தில் ஒரு பயணி உயிரிழந்ததாகவும், பல பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. 80 க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காயமடையாத மற்ற பயணிகள் வேறு ஒரு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. மீட்புப் பணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைக்கப்பட்டு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.
15 ஆம்புலன்சுகள், 5 பேருந்துகள் மீட்புப்பணிகளுக்காக வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவித்த மாவட்ட நிர்வாகம், ரத்த வங்கி திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என விளக்கம் அளித்தது.
இரவு நேரம் என்பதால் இருட்டில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை மீட்புக் குழுவினர் எதிர்கொண்டனர். அவர்களுக்கு செல்போனின் பிளாஷ் லைட்டை ஆன் செய்து பொதுமக்கள் உதவினர். இந்த நிலையில் இன்று 2 வது நாளாக விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகல் ஏறி நடைபெற்று வருகின்றன. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலேயே கிடக்கும் நிலையில் அவற்றை அப்புறப்படுத்தி சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைத்து மீண்டும் அந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications