குஜராத்தில் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு.. சக குடியிருப்புவாசிகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

அஹமதாபாத்: குஜராத் மாநிலம் வதோதராவின் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதரா மாநகரம் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். இது வதோதரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்த மாநகரில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். வதோதரா மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இதில் 89 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவார். முஸ்லீம்கள் 9.23 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 0.57 சதவீதம் பேரும் வசிக்கிறார்கள்..

Muslim Gujarat house

வதோதரா மாநகராட்சியில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவின் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றி பார்ப்போம்.

முதலமைச்சர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஹர்னியில் உள்ள வதோதரா மாநகராட்சி (விஎம்சி) குறைந்த வருமானம் கொண்டோருக்காக கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், குஜராத் மாநில தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தில் பணிபுரியும் 44 வயது முஸ்லீம் பெண்ணுக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீடு நடந்தது.

மொத்தம் 462 குடியிருப்புகளைக் கொண்ட அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தன் மகனுடன் குடியேறப்போவதை எண்ணி அந்த முஸ்லிம் பெண் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அங்கு குடியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் உள்பட 33 குடியிருப்பாளர்கள் வதோதரா மாவட்ட கலெக்டர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

தாங்கள் குடியிருக்கும் 462 குடியிருப்பு வளாகத்தில் ஒதுக்கப்பட்ட ஒரே முஸ்லீம் பெண்தான் என்றும், இது தவறு என்றும், முஸ்லிம் பெண்ணுக்கு குடியிருப்பு ஒதுக்கியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் வதோதரா மாநகராட்சியை கண்டித்து குடியிருப்புவாசிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவிய நிலையில், வதோதரா மாநகராட்சி கமிஷனர் திலீப் ராணா இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை. அதேபோல் மாநகராட்சி துணை ஆணையர் அர்பித் சாகர் மற்றும் வீட்டுவசதி வாரிய நிர்வாக இன்ஜினியர் நிலேஷ்குமார் பர்மர் ஆகியோரும் சர்ச்சைக்குரிய இந்த போராட்டம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதனிடையே 44 வயதாகும் முஸ்லீம் பெண், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 2020 ஆம் ஆண்டிலேயே எனக்கு வீடு ஒதுக்கீட்டை செல்லாததாக்கக் கோரி குடியிருப்பாளர்கள் குஜராத் முதல்வர் அலுவலகத்திற்கு (CMO) கடிதம் எழுதினார்கள். அப்போதில் இருந்தே போராட்டங்கள் தொடங்கியது. எனினும் எங்கள் குடியிருப்பு அமைந்துள்ள ஹர்னி காவல் நிலையத்தில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி புகாரை முடித்து வைத்தனர். ஆனால் இதே பிரச்னையை எழுப்பி மீண்டும் கடந்த ஜூன் 10ம் தேதி போராட்டம் நடத்தி உள்ளார்கள்" என்கிறார் வேதனையுடன்..

இதுபற்றி முஸ்லிம் பெண் மேலும் கூறுகையில், "நான் வதோதராவில் எல்லா மதத்தினரும் கலந்த கலவையான சுற்றுப்புறத்தில் வளர்ந்தேன். எனவே என்னுடைய குழந்தை தனித்து ஒரே இனத்துடன் வாழும் குடும்பமாக இருக்க வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை.. என் மகன் அனைத்து சாதி, மதத்தினரும் வாழும் ஒரு சுற்றுப்புறத்தில் வளர வேண்டும் என்று தான் நான் எப்போதும் விரும்பினேன்,.

ஆனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது எனது கனவுகள் சிதைந்தே போய்விட்டது. நான் இந்த விவகாரத்தை எதிர்கொண்ட எதிர்ப்பிற்கு தீர்வுகளே இல்லை. என் மகன் இப்போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான. அவனுக்கு எதுவும் தெரியாத வயது இல்லை.. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வயதில் இருக்கிறான். இந்த மத ரீதியான பாகுபாடுகள் என் மகனை மனதளவில் வெகுவாக பாதிக்கும்..." என்று அந்த முஸ்லிம் பெண் கூறினார்.

இதனிடையே 44 வயதாகும் முஸ்லிம் பெண்ணை வேறு ஒரு குடியிருப்புக்கு மாற்ற வேண்டும் என்று, அங்கு குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட 33 குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து வதோதரா மாவட்ட ஆட்சியர், வதோதரா மேயர், வதோதரா மாநகராட்சி கமிஷனர் மற்றும் வதோதராவில் உள்ள காவல் ஆணையர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளனர்.

இது பற்றி மோட்நாத் ரெசிடென்சி கோஆபரேடிவ் ஹவுசிங் சர்வீசஸ் சொசைட்டி லிமிடெட் அமைப்பினர் வெளியிட்ட அறிவிப்பில், "வதோதரா மாநகராட்சி ஒரு முஸ்லிம் பயனாளிக்கு 2019 மார்ச்சில் வீட்டு எண் K204ஐ ஒதுக்கி இருக்கிறது. ஆனால் இந்த ஹர்னி பகுதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் அமைதியான பகுதியாகும். சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் இங்கு முஸ்லிம்கள் குடியேற்றம் இல்லை என்றும் நாங்கள் நம்புகிறோம். இங்கு அவர்களுக்கு வீடு கொடுப்பது 461 குடும்பங்களின் அமைதியான வாழ்க்கையைத் தீயிட்டுக் கொளுத்துவது போன்றது..." என்று கூறியுள்ளனர்.

இதனிடையே காலனியில் வசிப்பவர்கள் முஸ்லீம்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டால் "உடனடியாக சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்" என்று குற்றம்சாட்டுகின்றனர். கையெழுத்திட்ட 33 குடும்பத்தினர்களில் ஒருவர் கூறுகையில் " வதோதரா மாநகராட்சி செய்தது தவறு, அவர்கள் ஒதுக்கப்பட்டவர் யார் யார் என்று சோதிக்கவில்லை... இது இந்துக்கள் வசிக்கும் பகுதி, பிற மத மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ளவர்கள் எங்கள் காலனியில் வசிப்பதை விரும்ப மாட்டோம் என்பதாலுமே நாங்கள் அனைவரும் இந்த காலனியில் வீடுகளை முன்பதிவு செய்துள்ளோம்" என்றார்.

முஸ்லிம் பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், வீட்டுக் காலனியில் உள்ள பல குடும்பங்களும் அசைவ உணவு உண்பவர்கள் என்றாலும், வேறு மதத்தைச் சேர்ந்தவர் குடியிருப்பது கவலையாக உள்ளது. முஸ்லிம் குடும்பம் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருப்பது எங்களுக்கு வசதியாக இல்லை. இது உணவு விருப்பத்தேர்வுகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பற்றியதும் தான்..." இவ்வாறு கூறினார்.

இதனிடையே அந்த முஸ்லிம் பெண் தற்போது தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வதோதராவின் மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த எதிர்ப்பின் காரணமாக அவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை விற்க விரும்பவில்லை என்றும் நான் காத்திருப்பேன். ஏற்கனவே அனைத்து குடியிருப்பாளர்களிடமிருந்தும் ஒரு முறை பராமரிப்பு கட்டணமாக ரூ 50,000த்தை வதோதரா மாநகராட்சி வசூலித்தது. நான் ஏற்கனவே செலுத்தினேன். இந்த ஹவுஸிங் காலனியில் வசிக்கும் உரிமையை அரசு எனக்கு மறுக்காததால், தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை" என்கிறார் கவலையுடன்.. வீடு ஒதுக்கப்பட்டு விட்டது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் போய் தான் தீர்க்க வேண்டியதிருக்கும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+