"அவலத்தின் உச்சம்"!.. சாதமும் உப்பும் மட்டுமே மதிய உணவு.. உ.பி. பள்ளி மாணவர்களின் பரிதாப நிலை!
அயோத்தி: உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக சாதமும், உப்பும் மட்டுமே வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஒரு மாணவனின் தந்தை எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் உத்தரபிரதேசத்தை பாஜக தலைவர்கள் பலரும் உதாரணமாக கூறி வரும் சூழலில், அங்கு நிலவும் உண்மை நிலைமை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆரம்பித்து வைத்த தமிழகம்...
ஏழைகளின் குழந்தைள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் மதிய உணவுத் திட்டம். இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டதே தமிழகம்தான். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் அங்கு அவர்களுக்கு உண்ண உணவாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஏழை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிச்சாலைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தனர். அதுவே, அந்தப் பிள்ளைகள் கல்வியை தொடரவும், வாழ்க்கையில் முன்னேறவும் வழிவகுத்தது. இவ்வாறு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் தற்போது பின்பற்றி வருகின்றன.

சாதமும் உப்புமே உணவு..
அந்த வகையில், உத்தரபிரதேசத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மதிய உணவுத் திட்டத்தில் அரசாங்க அதிகாரிகளும், பள்ளி நிர்வாகமும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில், அயோத்தி நகரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால் அது என்ன உணவு தெரியுமா? வெறும் சாதமும், உப்பும் தான். சாதத்தை தட்டில் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றுவதை போல பள்ளி நிர்வாகிகள் உப்பை கொட்டுகின்றனர்.

பரிதாபமாக சாப்பிடும் குழந்தைகள்
வீட்டிலும் உணவு கிடைக்கப்பெறாத அந்த ஏழைக் குழந்தைகளும், அந்த சாதத்தையும், உப்பையும் சேர்த்து பிசைந்து பரிதாபமாக உண்ணுகின்றன. இதனை அங்கு வந்த ஒரு குழந்தையின் தந்தை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது அவர், "ஏன் குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவை கொடுக்கிறீர்கள்?" என அங்குள்ள பள்ளி நிர்வாகிகளிடம் கேட்கிறார். ஆனால் அவர்கள், தங்கள் முகத்தை காட்டாமல் திரும்பி நிற்கின்றனர். பின்னர் அவர், பள்ளிக்கு முன்பு இருக்கும் அறிவிப்பு பலகையை வீடியோ எடுக்கிறார். அதிலோ, பள்ளியில் மதிய உணவாக சாதம், சப்பாத்தி, பருப்பு தால், காய்கறிகள், பால் வழங்கப்படுவதாக எழுதி இருக்கின்றன. அப்போது அவர், "எங்கள் குழந்தைகள் ஒரு நாள் கூட இந்த உணவை சாப்பிட்டதில்லையே..| என நா தழுதழுக்க கூறுகிறார்.

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
இந்த வீடியோ நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கானோரால் இந்த வீடியோ பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விஷயம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உ.பி.க்கு இது புதிதல்ல..
உத்தரபிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த 2019-ம் ஆண்டு மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தியும், உப்பும் மட்டுமே பரிமாறப்பட்டன. இதனை வீடியோ எடுத்த பவன் ஜெய்ஸ்வால் என்ற நிருபர் அதை செய்தியாக வெளியிட்டார். ஆனால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அந்த நிருபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications