8 பேர் பலியான பட்டாசு கடை வெடிவிபத்து.. கடை உரிமையாளர் செல்வகணபதி கைது
கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பட்டாசுக் கடை ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தில் 15 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பட்டாசுக் கடை உரிமையாளர் செல்வகணபதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தீபாவளிக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கப் பொதுமக்கள் கடை வீதிகளுக்கு படையெடுத்துள்ளனர்.
அதேநேரம் ஆங்காங்கே தீவிபத்து சம்பவங்களும் ஏற்படுகிறது. கடந்த வாரம் சங்கராபுரத்தில் உள்ள பட்டாசுக் கடையில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையின் அருகே இருந்தவர்களும் படுகாயம் அடைந்தனர். பட்டாசுக் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் அருகில் இருந்த ஜவுளிக்கடை, டீக்கடை உள்ளிட்ட மற்ற கடைகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது.

8 பேர் பலி
அருகில் இருந்த பேக்கரியில் இருந்தவர்கள் மீதும் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் 15 வயது சிறுவன், ஒரு பெண் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் இந்த தீ விபத்தில் படுகாயமடைந்தனர். இரண்டு நாட்களுக்குப் பின்னரே அந்த சிறுவனின் உடல் இடிபாடுகளில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான விபத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

என்ன காரணம்
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அளவிற்கு அதிகமாகப் பட்டாசுகளை இருப்பு வைத்ததும் தீ விபத்திற்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. . சங்கராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தீ விபத்து தொடர்பாகக் கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உரிமையாளர் கைது
அரசு அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகளை வைத்திருந்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாகக் கடை உரிமையாளர் செல்வகணபதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications