சொத்து குவிப்பு வழக்கில் வருமானம் வந்ததை நிரூபிக்கும் பொறுப்பு ஜெ.க்குதான் உள்ளது: ஆச்சார்யா வாதம்
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு எப்படி வருமானம் வந்தது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குதான் இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அப்பீல் மனு மீதான விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்தார். ஆனால் இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 23-ந் தேதி முதல் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடன் பட்டியல்
கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 3 நாட்கள் தம்முடைய வாதங்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யாவும் தமது இறுதி வாதங்களை முன்வைத்து வருகிறார். நேற்றைய விசாரணையின் போது ஜெயலலிதா உள்ளிட்டோர் பல்வேறு வங்கிகளில் இருந்து பல்வேறு கட்டங்களில் பெற்ற கடன் தொகைகள், அவற்றை திருப்பிக் கட்டிய விவரங்கள், நிலுவைத் தொகை ஆகியவ விவரங்களை ஆச்சாரியா தாக்கல் செய்தார்.

கடன் எப்படி வருமானமாகும்?
பின்னர் ஆச்சார்யா முன்வைத்த இறுதி வாதம்:
பல்வேறு வங்கிகளிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெற்ற கடன் தொகை 18 கோடி ரூபாயை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) அவர்களது வருமானமாக கணக்கு காட்டியுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இந்த கடனை வருமானமாக கணக்கிட முடியாது என்று கூறியும் அந்த கடன்களை மொத்தமாக ரூ24 கோடியாக கணக்கிட்டதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்?அத்துடன் வங்கி கடன்களை பெற்றது குறித்து விளக்கம் அளிக்க குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தேவையான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் அதனை சரிவர நிரூபிக்க முடியவில்லை.

பரிசுப் பொருட்கள் மதிப்பு குறைப்பு
1992 பிப்ரவரி 24-ந் தேதியன்று ஜெயலலிதாவின் 44-வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் காசோலைகள் மூலம் அவருக்கு ரூ2.15 கோடி வழங்கப்பட்டதாக அவரே ஒப்புக் கொண்டு இருக்கிறார். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றமோ இந்த பரிசுப் பொருட்களின் மதிப்பை வெறும் ரூ1.50 கோடியாக மதிப்பிட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய முரணாகும். முதல்வர் போன்ற பொதுப்பணியில் இருக்கும் ஒருவர் தனக்கு அளிக்கப்படும் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது. ஜெயலலிதா அவ்வாறு செய்யவில்லை. இது விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

சர்ச்சைக்குரிய நமது எம்ஜிஆர் சந்தா
வருமான வரி தாக்கல் செய்தபோது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் ரூ.1.15 கோடி கிடைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி (குமாரசாமி) அதனை ரூ3.85 கோடி கூடுதலாக சேர்த்து ரூ.4 கோடியாக மதிப்பிட்டுள்ளார். இது தவறான மதிப்பீடாகும். நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தா தொகை செலுத்தும் திட்டம் மூலம் ரூ14 கோடி கிடைத்ததாக ஜெயலலிதா தரப்பு கூறுகிறது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கு தொடங்கப்பட்ட பின்னர்தான் இந்த சந்தா செலுத்தும் முறையே அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் சந்தா தொகை கட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் தொலைந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்த ரசீதுகளும், அவை வைக்கப்பட்டிருந்த காருடன் தொலைந்து போனதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தொகைகளும் தவறான வகையில் வருமானமாக சேர்த்தது என்பதால் அவற்றை கணக்கில் சேர்க்கக் கூடாது.
இவ்வாறு ஆச்சார்யா தமது வாதங்களை முன்வைத்தார்.

வருமான வரி அப்பீலுக்கு போனதா?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நமது எம்.ஜி.ஆர். சந்தா திட்டம் மூலம் ரூ14 கோடி கிடைத்தது என்பதை வருமான வரி தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு செய்துள்ளதா? என கேள்வி எழுப்பினர். இது குறித்த விவரங்களை சேகரித்து தாக்கல் செய்வதாக ஆச்சார்யா கூறினார்.

ஆச்சார்யா வாதம்
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய வாதத்தின் தொடக்கத்தில், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ1 சம்பளம் வாங்கிய ஜெயலலிதா ரூ66 கோடிக்கு சொத்து சேர்த்தார் என்பது வழக்கு. அதிலும் கூட விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) ரூ13 கோடி செலவாக கழித்து ரூ53 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
ஆக தமக்கான வருமானம் எப்படி வந்தது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்குத்தான் இருக்கிறது என்றார் ஆச்சார்யா.












Click it and Unblock the Notifications