ஹெலிகாப்டர் ஊழல்: மன்மோகன்சிங், சோனியா மீது வழக்கு பதிய கோரி மனு- சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்களை சப்ளை செய்ய, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக அந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் விமானப் படை முன்னாள் தளபதி தியாகியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கோ, ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணைக்கோ உத்தரவிட வேண்டும். சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இந்த பேரத்தால் பலன் அடைந்திருக்கக்கூடிய இத்தாலியே நடவடிக்கை எடுத்திருக்கும்போது, பணத்தை இழந்துள்ள இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போபர்ஸ் வழக்கின் கதி, இந்த வழக்குக்கும் நேர்ந்து விடக்கூடாது என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு 4 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications