ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும்.. முன்னாள் எம்பியுமான தர்மபுரி ஸ்ரீநிவாஸ் உயிரிழப்பு
அமராவதி: ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தர்மபுரி ஸ்ரீநிவாஸ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி ஸ்ரீநிவாஸ் ஒரு காலத்தில் காங்கிரஸில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக வலம்வந்திருந்தார். 90களில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஏதாவது முக்கிய முடிவுகளை எடுக்க முயன்றால், அதற்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரி ஸ்ரீநிவாஸ் இல்லாமல் நடக்காது. அந்த அளவுக்கு கட்சியின் முக்கிய தலைவராக ஸ்ரீநிவாஸ் இருந்தார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான தலைவர்களில் ஒருவராகவும் இவர் இருந்திருக்கிறார்.

தர்மபுரி ஸ்ரீநிவாஸின் அரசியல் பயணம் அவரது இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. 1948ம் ஆண்டு பிறந்த அவர், இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு இளைஞர் காங்கிரசில் பணியாற்றியுள்ளார். இவரது அரசியல் ஆர்வத்திற்கு காரணம் அப்போதைய நிதியமைச்சராக இருந்த அர்குல் ராஜாராம்தான். இவர் ஸ்ரீநிவாஸுக்கு மாமா முறை வேண்டும். இவரை பார்த்துதான் ஸ்ரீநிவாஸுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், முதன் முதலாக 1989ம் ஆண்டு நிஜாமாபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். முதல் தேர்தலில் வெற்றி சாத்தியமானாலும் அடுத்தடுத்த தேர்தல்கள் அவரக்கு சோதனைகளாக அமைந்தது. இருப்பினும் தீவிர முயற்சியால் இரண்டு முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும், எம்பியாகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவர் எம்எல்ஏவாக இருந்தபோதும், அமைச்சராக இருந்தபோதும் முதலமைச்சர்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார். இவர் ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வர் ஆவதற்கு தீவிரமாக முயன்றார். ஆனால், உட்கட்சி பூசல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக அவருக்கு முதல்வர் பதவி கடைசி வரை கிடைக்காமலேயே போய்விட்டது. இருப்பினும், இவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க ஆந்திர மாநிலத்தின் பிராந்திய கட்சி ஒன்று முன்வந்தது.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகித்து காங்கிரசிலேயே இருந்தார். இருப்பினும் தொடர் புறக்கணிப்பு காரணமாக வெறுத்துப்போன அவர் இடையில் பிஆர்எஸ் கட்சிக்கு தாவினார். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி அவர் கட்சி தாவினார். அந்த நேரத்தில் காங்கிரஸின் பல்வேறு தலைவர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.
குலாம் நபி ஆசாத் தொடங்கி, அமரீந்தர் சிங் என பல்வேறு முக்கிய தலைவர்கள் கட்சி மாறினர். இப்படி கட்சி மாறியவர்களில் தர்மபுரி ஸ்ரீநிவாஸும் ஒருவர். இருப்பினும் கடந்த ஆண்டு இவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இறுதியாக கடந்த ஆண்டு காங்கிரஸில் அவர் மீண்டும் இணைந்தார். இப்படி இருக்கையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பெயர் காரணம்: தர்மபுரி ஸ்ரீநிவாஸ் என்பதால், தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது அர்த்தமல்ல. ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே தர்மபுரி என்கிற ஊர் இருக்கிறது. எனவே ஸ்ரீநிவாஸின் பூர்வீகம் இந்த ஊரை சேர்ந்ததாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications